Tamilnadu

ஆதாரம் இல்லாம கேஸ் போட்டு எங்க நேரத்தை ஏன் வீணடிக்கிறீங்க? : மனுதாரரால் ஐகோர்ட் நீதிபதிகள் கொதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கையை பயன்படுத்த அனுமதியளித்து கடந்த அக்டோபர் 23ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதியளித்தால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், ரசிகர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற மாட்டார்கள் எனவும் மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிபுணர்களின் ஆலோசனைப்படி, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மீன் சந்தைகளில் இருப்பதைப் போல திரையரங்குகள் இருக்காது எனவும் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், தனி மனித விலகலை பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என அரசு வழிகாட்டு விதிகளை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பண்டிகை காலங்களில் கொரோனா தாக்கம் அபாய அளவை தாண்டி விடவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், எந்த ஆதாரங்களும் இல்லாமல் இதுபோல வழக்குகளை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த கூடாது எனவும் மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாநில அரசு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் சூழலை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

Also Read: என்ன வெச்சு அன்பு செல்வன் படத்துக்கு விளம்பரம் பன்றாங்க - தயாரிப்பாளர் மீது கெளதம் மேனன் பரபரப்பு புகார்!