Tamilnadu

துரித நடவடிக்கையில் திமுக அரசு; பொதுமக்களிடம் முக்கிய வேண்டுகோள் வைத்த அமைச்சர் துரைமுருகன் #ChennaiRains

தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அடையாறு மற்றும் கூவம் முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் பெய்து வரும் மழைநீர் கடலில் கலக்கும் இடமான முகத்துவாரங்களை தூர்வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்களை கவனமாக கண்காணிக்க வேண்டியுள்ளது. மேலும் பூண்டி செம்பரம்பாக்கம் போன்ற நீர்நிலைகள் நிறைந்துவிட்டன. இந்த நிலையில் கனமழை அதிகரிக்கும் பட்சத்தில் சேதங்களை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read: “சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை” : வானிலை ஆய்வு மையம் இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

மழைநீர் அதிகமாக பெய்யும் பட்சத்தில் அனைத்து மழைநீரும் கடலில் கலக்க வேண்டும். ஆகையால் மழைநீர் கடலில் கலக்கக்கூடிய இடமான முகத்துவாரம் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். ஆகாவே முகத்துவாரத்தை பலப்படுத்தும் பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மின்னல் வேகத்தில் பல இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் மட்டுமே தமிழ்நாடு அரசு செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் பயனுள்ளதாக அமையும். சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக நடத்தி வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அணையில் நீர் நிரம்பாத வகையில் தேவைக்கேற்ப அவ்வப்போது அனையையை திறந்து விடவேண்டி உள்ளது. வரும் 9ஆம் தேதி முதல் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் நீர்வளத்துறை சார்பில் பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் கால்வாய்கள் சரியான முறையில் தூர்வாரப்படாததாலும் மதகுகள் சரியான முறையில் பராமரிக்கப்படாததாலும் இம்மாதிரியான பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆகையால் வரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும்  தமிழ்நாடு அரசு  சிறப்பான முறையில் மேற்கொள்ளும்.

Also Read: தீவிரமடையும் பருவமழை; சென்னை உட்பட மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் என்ன? விவரம் இதோ