Tamilnadu

“‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு” : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் விழிப்புணர்வு கலை பயண பிரசார வாகனத்தை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “கொரோனா தொற்றால் கடந்த ஒன்றை ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த கல்வி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு போதாது என்று முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை நிபுணர் குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். அதனடிபடையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்துவதற்காக ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்கள் மட்டுமின்றி, பிறப்பு சான்றிதல் அடிப்படையில் தகவல்களை திரட்டி, கல்வி பயிலாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி போதிப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் 30 லட்சம் மாணவர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

எனவே அந்த மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சமூத கூடங்கள் உள்ளிட்ட பகுதியில் மாலைநேர வகுப்புகள் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மதுரை உள்பட 9 மாவட்டங்களில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு தேவையான அனைத்து நிதியும் ஒதுக்கப்படும்.

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் இந்த கல்வி புகட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “வார்டு உறுப்பினராக பதவியேற்ற ரவுடியின் மனைவி கைது” : பதவியேற்பு விழாவில் போலிஸார் அதிரடி - என்ன காரணம்?