Tamilnadu
வலியால் துடித்த 2 சிறுவர்களை அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்: திருவண்ணாமலையில் சாதனை!
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய கோலி குண்டு மற்றும் மற்றொரு சிறுவனின் காதில் சிக்கிய சிறிய ரக பேட்டரி ஆகியவற்றை அறுவை சிகிச்சையின்றி அரசு மருத்துவர்கள் அகற்றியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பினால் அரசு மருத்துவமனைகள் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு சிக்கலான பிரச்சனைகளை அரசு மருத்துவர்கள் குணப்படுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வசிப்பவர் சிலம்பரசன். இவரது மகன் அஸ்வின் (7). இவர், தனது வீட்டில் கடந்த 13-ஆம் தேதி மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் வைத்திருந்த கோலி குண்டை விழுங்கிவிட்டார்.
இதனால் தண்ணீர் கூட குடிக்க முடியால் தவித்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர், சிறுவனை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவர் இளஞ்செழியன் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் சிந்துமதி, கமலக்கண்ணன், ராஜாசெல்வம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர்.
பின்னர் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அஸ்வினின் தொண்டைப் பகுதியில் உணவுக்குழாய் மேல் பகுதியில் கோலி குண்டு சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனுக்கு மயக்கவியல் சிறப்பு மருத்துவர் செந்தில்ராஜாவை வரவழைத்து மயக்க மருந்து செலுத்தப்பட்டது. பின்னர், அறுவை சிகிச்சையின்றி சிறுவன் அஸ்வினின் தொண்டையில் சிக்கிய கோலி குண்டு அகற்றப்பட்டது.
இதேபோல், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தில் வசிக்கும் முபாரக்பாஷா என்பவரின் மகன் முக்தர்கான் (5) கடந்த 12-ஆம் தேதி காது வலியால் துடித்துள்ளார்
அவரது பெற்றோர் செங்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மருத்துவர் அறிவுறுத்தியபடி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 13-ஆம் தேதி அழைத்து வந்தனர்.
அங்கு சிறுவனை சிறப்பு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தபோது, காதின் நடுப்பகுதியில் சிறிய ரக பேட்டரி சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சையின்றி காதில் இருந்த சிறிய ரக பேட்டரியை அகற்றினர். பேட்டரியில் உள்ள அமிலம் வெளியேறி இருந்தால், காதில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு சிறுவர்களை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்திய மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!