Tamilnadu

“தி.மு.க அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மென்மேலும் வளர்ந்து வானைத் தொடும்” : வைகோ வாழ்த்து!

தி.மு.க அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மென்மேலும் வளர்ந்து வானைத் தொடுவதற்கு, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளித்து இருக்கின்ற பேராதரவு அடித்தளமாக அமைந்து இருக்கின்றது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

“அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கின்றது.

மொத்தம் உள்ள 140 மாவட்ட ஊர் ஆட்சி மன்ற உறுப்பினர் தொகுதிகளில், திமுக கூட்டணி 138 இடங்களில் அமோக வெற்றி அடைந்துள்ளது. 1381 ஒன்றியக் குழு உறுப்பினர் இடங்களுள், 1021 இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றது.

தமிழக மக்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்குப் பேராதரவு அளித்து, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைவதற்கு அகரம் எழுதினார்கள்.

கொரோனா கொடுந்துயரம் தமிழக மக்களை நிலைகுலையச் செய்திட்ட நேரத்தில், பொறுப்பு ஏற்ற திமுக அரசு, கடந்த ஐந்து மாத காலமாக மேற்கொண்ட மக்கள் நலன் சார்ந்த பணிகள், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும், வாழ்த்துகளையும் பெற்றுத் தந்தன. சாதனைச் சரித்திரம் படைத்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு, மேலும் ஆக்கமும் ஊக்மும் அளிக்கும் விதத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்குகளை வாரிக் குவித்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மென்மேலும் வளர்ந்து வானைத் தொடுவதற்கு, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளித்து இருக்கின்ற பேராதரவு அடித்தளமாக அமைந்து இருக்கின்றது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட இரண்டு மாவட்டக் குழு உறுப்பினர் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 23 ஒன்றியக் குழு உறுப்பினர் இடங்களில் போட்டியிட்டு, 16 பேர் வாகை சூடி உள்ளனர். தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒரு மாவட்டக் குழு உறுப்பினரும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஒரு ஒன்றியக் குழு உறுப்பினரும், தென்காசி மாவட்டத்தில் 13 ஒன்றியக் குழு உறுப்பினர்களும். பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியை ஈட்டி உள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்புக்கு கழகத்தைச் சேர்ந்த ஐவர் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்கு அளித்து, சரித்திர வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன். தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொற்கால ஆட்சி தொடர்வதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “கலைஞரை நெஞ்சில் ஏந்தியவர்களை ஒருபோதும் வீழ்த்தமுடியாது” : 22 வயது ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா பேட்டி!