Tamilnadu

“முத்தமிழறிஞர் கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ 200வது பகுதி ஒளிபரப்பு” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் “நெஞ்சுக்கு நீதி” வரலாற்றுத் தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் 200வது பகுதி ஒளிப்பரப்பையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்து வாழ்த்தியுள்ளார்.

இது பற்றிய விபரம் வருமாறு :-

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை “நெஞ்சுக்கு நீதி” என்று 6 பாகங்கள் எழுதினார். கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் “நெஞ்சுக்கு நீதி” - கலைஞரின் வரலாற்றுத் தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

இத்தொடர் ஒலிபரப்புத் தொடங்கி இந்த வாரம் 200-வது பகுதியை தொட்டது. இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 200-வது பகுதி அடைந்ததையொட்டி கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கம்பீரக் குரலில் நெஞ்சுக்கு நீதி வரலாற்றுத் தொடர் ஒலிபரப்பியது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அதில், “நாங்கள் எல்லாம் இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள். நாட்டால் இந்தியர்கள், இந்திய நாட்டின் வலிமைக்காகவும், வனத்திற்காகவும் பாதுகாப்பதற்காகவும் பாடுபடக்கூடியவர்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடக் கூடியவர்கள், மாநிலத்தின் மானம் காக்க எங்கள் இன்னுயிரையும் தர சித்தமாக இருப்பவர்கள்”. - என்று உணர்ச்சிப் பொங்க கலைஞர் அவர்களின் கம்பீரக் குரலில் பேசியது நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

கலைஞர் தொலைக்காட்சியில் நெஞ்சுக்கு நீதி ஒளிபரப்பு 200-வது பகுதியை தொட்டுள்ளது சரித்திரச் சாதனையாகும். ஒரு வரலாற்று நாயகரின் வரலாறு - நெஞ்சுக்கு நீதி 200-வது பகுதியினை கடந்தது உலகிலேயே இதுதான் முதல் முறை எனக் கூட கூறலாம். இந்த வரலாற்றுத் தொடர் 200வது பகுதியை அடைந்ததையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

முதல்வர் அவர்களின் வாழ்த்துச் செய்தி வருமாறு: -

“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நம் நெஞ்சம் எப்போதும் மறக்காது. அதேபோல், அவர் எழுதிய “நெஞ்சுக்கு நீதி”யையும் யாரும் மறக்க முடியாது. நமது கலைஞர் செய்திகள் தொலைக் காட்சியில் வாரந்தோறும் வெளியாகும் நெஞ்சுக்கு நீதி தொடர் இந்த வாரம் 200-வது பகுதியைத் தொடுவது அறிந்து மகிழ்கின்றேன். தலைவர் கலைஞர் நம்மோடு தான் வாழ்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தும் இந்தத் தொடரை வாழ்த்துகிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

Also Read: “6 நாளில் 2வது முறையாக நடந்த தவறு.. பயனாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட Facebook” : காரணம் என்ன?