Tamilnadu

புதுசாதான் எதும் கொண்டு வரல; இருக்குறதயாச்சும் விட்டு வெச்சீங்களா? - மோடி அரசை சாடிய ஆசிரியர் கி.வீரமணி!

பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுப்பது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகம், மதசார்பின்மையை கேள்விக்குறியாக்கி வரும் மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுகிறது.

அந்த வகையில் திராவிடர் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னையிலுள்ள பெரியார் திடல் முன் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ் உள்ளிட்டோரும் திராளான நிர்வாகிகளும் ஒன்றிய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் கி. வீரமணி, "தமிழகத்தில் தி.மு.க கூட்டணி சார்பில் அமைதி வழியில், அதே நேரம் இந்த கொரோனா காலத்தை கவனத்தில் கொண்டு விதிகளை மீறாமல் ஒன்றிய அரசுக்கு நமது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மக்கள் போராட்டமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Also Read: "இனி மோடி மந்திரம் பலிக்காது": எடியூரப்பாவின் பேச்சால் பா.ஜ.கவில் சலசலப்பு!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம், தலா 15 லட்சம் ரூபாயை ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்துவோம், 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றெல்லாம் சொன்னார் இன்றைய பிரதமர் மோடி அவர்கள். ஆனால் அனைத்து வாக்குறுதிகளும் நீரில் எழுதப்பட்ட வார்த்தைகளாக மாறியுள்ளன. புதிதாக தான் ஏதும் வரவில்லை என்றால், ஏற்கனவே இருந்ததையும் விற்பது, அடமானம் வைப்பது என செய்து கொண்டிருக்கிறார்கள்.

இல்லத்தரசிகளுக்கு நல்லது செய்யப்போவதாக சொன்னார்கள். ஆனால் இன்று இல்லத்தரசிகளின் உள்ளம் எரியும் அளவுக்கு கேஸ் விலை உயர்வு உள்ளது. அனைவரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்த கொரோனா காலத்தில் இருசக்கர வாகனத்தையே பயன்படுத்த முடியாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்வு இருக்கிறது. ஆனால் தி.மு.க அரசு லிட்டருக்கு 3 ரூபாயினை குறைத்துள்ளது. இத்தனைக்கும் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது தமிழகம்.

அந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளை பாதிப்பது மட்டுமின்றி, மாநில உரிமைகளையும் பறிக்கும் வகையில் உள்ளன. இவர்களின் எதோச்சதிகார மனப்பான்மையை கண்டித்து வெயில், குளிர், மழையை தாங்கி டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து இந்தியாவே ஒன்றிணைத்து நிற்கிறது. எனவே தமிழகத்தில் நம்முடைய அறப்போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியுள்ளது. இது முடிவல்ல; எதேச்சாதிகார ஆட்சி ஜனநாயக முறையில் அகற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும்" என்றார்.

Also Read: மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு!