Tamilnadu

சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி.. 3 பேர் கவலைக்கிடம்.. ஆரணியில் அதிர்ச்சி சம்பவம் - ஹோட்டலுக்கு சீல்!

ஆரணியில் உள்ள ஹோட்டலில், சிக்கன், பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் 7 ஸ்டார் என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டலில் துந்தரீகம்பட்டைச் சேர்ந்த ஆனந்த், அவரது மனைவி பிரியதர்ஷினி, மகள் லோசினி (10), மகன் சரண் (14), ஆகியோர் கடந்த புதன்கிழமையன்று சாப்பிட்டுள்ளனர்.

பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் உள்ளிட்டவற்றை இவர்கள் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். வீட்டுக்குச் சென்ற அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர். சிறுமி லோஷினிக்கு மிகவும் உடல்நலம் குன்றிய நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த ஹோட்டலில் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டவர்களுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பலரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதைதொடர்ந்து, இந்த உணவகத்துக்கு ஆரணி கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். மேலும், ஹோட்டலை நடத்தி வருபவர்கள், சமையல் மாஸ்டர் ஆகியோரை ஆரணி நகர போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: “கனவை நனவாக்கிய ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா” - வைரலாகும் நெகிழ்ச்சி ட்வீட்!