Tamilnadu

கொசு மருந்து அடிப்பதாக நாடகமாடி கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பல்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்!

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சம்பத். இவர் மின் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு ஷாலி என்ற ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களாக பணியாற்றுவதாகவும், வீட்டில் கொசு மருந்து அடிக்கவேண்டும் என்றும் தனியாக இருந்த நந்தினியிடம் கூறியுள்ளனர்.

இவர்களின் பேச்சை நம்பிய நந்தினி இவர்களை வீட்டிற்குள் அனுமதித்தார். வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் உடனே கதவை மூடி, கத்தியைக் காட்டி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொடுக்குமாறு நந்தினியை மிரட்டியுள்ளனர்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத நந்தினி கூச்சலிட்டுள்ளார். இதனால் அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது அக்கம்பக்கத்தினர் இவர்களைப் பிடிக்க முயன்றனர்.

இதில் மூன்று பேரில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார். மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட நபரைப் பொதுமக்கள் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் எனத் தெரியவந்தது. தப்பி ஓடிய இரண்டு பேர் குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: "ATM-மில் கொள்ளையடிக்க வந்து வெறுங்கையோடு திருப்பிய ட்ரவுசர் கொள்ளையன்" : மதுரையில் நடந்தது என்ன?