Tamilnadu

“மின்வாரியம் பேரிச்சம்பழ கடைக்கு போனதற்கு யார் காரணம்?”: ஆதாரம் கேட்ட EPS-க்கு தி.மு.க MLA பொளேர் பதிலடி!

சட்டப்பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எழும்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும், சோழர் காலத்தில் எழும்பூர் தலைநகரமாக இருந்தது எனக் குறிப்பிட்ட அவர், 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த எழும்பூர் பகுதியை எழுமூர் என்று பெயர் மாற்ற வேண்டும். ஆங்கிலத்தில் Ezhumoor என்று மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் பேசிய அவர், “கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மின்வாரியம் அதானி குழுமத்திடமிருந்து மின்சாரத்தை ஒரு யூனிட் ஏழு ரூபாய் என்று ஏன் வாங்கியது? மகாராஷ்டிரா 5 ரூபாய்க்கு வாங்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் 7 ரூபாய்க்கு வாங்கப்பட்டது? 'மேட்ச் ஃபிக்சிங்' கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் மின்சார கொள்முதலில் 'பர்ச்சேஸ் ஃபிக்சிங்' நடந்துள்ளது.

தங்கமாக இருக்கவேண்டிய தமிழக மின்சார வாரியம், ஈயம், பித்தளையாக மாறி பேரிச்சம்பழக் கடைக்கு போனதற்கு யார் காரணம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''ஆதாரம் இருக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பரந்தாமன் எம்.எல்.ஏ, ''சிஏஜி அறிக்கையின் 2013- 2018 புத்தகத்தில் பாருங்கள். அதில் ஆதாரம் இருக்கிறது'' என பதிலடி கொடுத்தார்.

Also Read: 2 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு... டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி!