Tamilnadu
“தங்கத்தை கொடு தாயத்து செய்து தருகிறேன்”: பரிகாரம் என்ற பெயரில் பெண்ணிடம் நகை மோசடி செய்த போலி சாமியார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சக்தி (37). இவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பல்வேறு பூஜைகள் நடத்தி, சாமியார் போல காண்பித்துக் கொண்டு ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இவரிடம் தனது குடும்பப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்ய எண்ணி விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 52 வயது பெண் ஜோதிட நிலையத்துக்கு சென்றுள்ளார். சாமியார் சக்தி, உங்களது வீட்டை இடித்து மாற்றியமைத்தால் குடும்பப் பிரச்சினை தீரும் என கூறியுள்ளார். அதற்கு அப்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, சாமியார் சக்தி, அந்தப் பெண்ணிடமிருந்து 2.5 பவுன் தங்கச் செயினை பெற்றுக் கொண்டு ரூ.30 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணும் வீட்டை இடித்துக் கட்டியுள்ளார்.
அதன் பின்னரும் அவரது குடும்பப் பிரச்சினைகள் தீரவில்லை என்று அந்த பெண் மீண்டும் சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார். உங்கள் பிரச்சினைகள் தீர, தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூ.3500-ம் கொண்டு வந்தால், அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்து தருகிறேன் என சாமியார் சக்தி கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்தப் பெண்ணும் 7 கிராம் தங்கத்தை உருக்கி அவரிடம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை, அந்த 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதைக் கேட்ட அந்தப் பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலிஸார் விசாரணை நடத்தி, போலி சாமியார் சக்தியை கைது செய்தனர். மேலும் இது போன்று வேறு யாரையும் மோசடி செய்துள்ளாரா என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!