Tamilnadu

#LIC65 நினைவலை: தனியார் மயம் எனும் ராட்சத விலங்கு: வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலையும் மோடி அரசு!

தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் சாந்தி தியேட்டர்கள்தான் அக்காலத்தைய பெரிய தியேட்டர்கள். எந்த படம் வந்தாலும் அந்த தியேட்டர்களுக்குதான் அம்மா என்னை அழைத்துச் செல்வார். படம் முடிந்து வீடு திரும்ப நாங்கள் வந்து நிற்கும் பஸ் ஸ்டாப், எல்ஐசி பஸ் ஸ்டாப்.

அம்மாதான் எல்ஐசியை எனக்கு அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே உயரமான கட்டடம் என்றார். பதினைந்து மாடிகள் என்றார். இந்தளவுக்கு உயரமாக கட்டடம் கட்ட முடியுமா என யோசித்திருக்கிறேன். பதினைந்தாவது மாடிக்கு எப்படி போவார்கள் என கேட்டபோதுதான் ‘லிஃப்ட்’ என ஒரு விஷயம் இருப்பதே எனக்கு தெரிய வந்தது.

ஒருவர் செத்தாலும் பணம் கிடைக்கும் என்கிற விஷயமே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தமிழ்ச் சூழலில் எல்ஐசி ஏஜெண்ட் என்றே ஒரு தலைமுறை இருந்தது எனக் கூறலாம். வாழ்க்கையின் ஒரு காலகட்டத்திலேனும் எல்ஐசி முகவராக பணிபுரிந்த நகர்ப்புற தலைமுறை ஒன்று இருந்தது. சட்டையை ‘டக் இன்’ செய்து கொண்டு கையில் ஒரு சூட்கேஸ்ஸுடன் அவர்கள் தமிழ்நாடெங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களின் பணிக்கு பாதுகாப்பும் இருந்தது. நிறுவனத்திலிருந்து முகவர்களுக்கு கொடுக்கப்படும் அன்பளிப்புகள், சுற்றுலா பயணங்கள் என பல்வேறு சலுகைகளும் உண்டு. எல்ஐசி முகவராவது என்பது அப்போதெல்லாம் சாதனைக்குரிய விஷயம்.

எல்ஐசி முகவர் வாழ்க்கைக்கு அப்போது இருந்த ஏக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமெனில் Pursuit of happyness படத்தில் பங்குத் தரகரை முதன்முதலாக வில் ஸ்மித் சந்திக்கும் காட்சியை யோசித்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த காரில் ‘டிப் டாப்’பாக வந்து இறங்கும் நபரை பார்த்து ஆச்சரியமாக வில் ஸ்மித் கேட்கும், “What do you do and how do you do it?" என்கிற கேள்விதான் எல்லாருக்கும் எல்ஐசி முகவர்களை பார்க்கும்போது அக்காலத்தில் இருந்தது. அநேகமாக பழைய ‘பத்மினி’ காரும் மாருதி 800 காரும் அதிகமாக வாங்கியது எல்ஐசி முகவர்களாகதான் இருப்பார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், அச்சமயத்தில் காப்பீடு என்பது குடும்பத்தின் முக்கியமான அங்கமாக இருந்தது. நகர்ப்புறத்துடன் சிறு அறிமுகம் ஒருவர் கொண்டிருந்தாலும் அவரின் குடும்பத்தில் ஒரு காப்பீடு போடப்பட்டிருக்கும். ஆயுள் காப்பீடு என்பது ஒரு குடும்பத்துக்கு மிகப் பெரும் கவசமாக இருந்த காலம் அது. திடுமென நேரும் மரணத்திலிருந்து ஒரு குடும்பத்தை பொருளாதார ரீதியாக காப்பாற்ற அரசு அப்போதெல்லாம் பொறுப்பு எடுத்திருந்தது.

இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த சில வருடங்களிலேயே ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுவிட்டது. 246 தனியார் நிறுவனங்கள் ஒன்றாக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டு இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு இலகுவாக நிறுவனம் சென்று சேர்ந்தது. குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முடித்திருந்தால் நகர்ப்புறத்திலும் 10ம் வகுப்பு முடித்திருந்தால் கிராமப்புறத்திலும் முகவர் ஆகிவிடலாம்.

ஒரு தனிநபரின் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் மிகச் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டிருந்தது. 90களுக்கு பிறகு மாற்றங்கள் நேரத் தொடங்கின. எல்ஐசியின் உயரம் திட்டமிட்டு மட்டுப்படுத்தப்பட்டது. தனியார் நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையில் இறக்கி விடப்பட்டன. பல வகை காப்பீடுகள் முளைத்தன. வண்ணப்பூச்சுகளுடன் பளபளப்பாக இறக்கப்பட்டன. எல்ஐசிக்கான சந்தை ஈவிரக்கமின்றி கூறு போடப்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் காப்பீட்டு முகவராக இருந்த காலம் மறைந்தது. நாம் கட்டிய காப்பீட்டுக்கு நாமே அலையவிடப்படும் காலம் நேர்ந்தது. தவணைகளும் தவறிய தவணைகளுக்கு அபராதமும் முதிர்ந்த பிறகு பணம் கிடைக்க அலைவதுமென காப்பீட்டுக்கென நாம் கொண்டிருந்த வாழ்க்கை அனுபவம் சிதைக்கப்பட்டது. காப்பீட்டுக்கென இருந்த கலாசாரதன்மை அழிக்கப்பட்டு இயந்திரத்தனமான லாபவெறி ஊட்டப்பட்டது.

அடுத்தடுத்த வருடங்களில் எல்ஐசி முகவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கின. பணிகளும் ஊதியமும் கமிஷன் தொகையும் குறைக்கப்பட்டது. இயல்பாகவே எல்ஐசி முகவர்கள் தனியார் காப்பீட்டு முகவர்களாக ஜாகையை மாற்றினர். முற்றிலுமாக எல்ஐசியை தனியாருக்கு காவு கொடுக்கும் வாய்ப்புக்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இன்றைய சூழலில் மோடியின் கையில் இருக்கும் வெண்ணெய் எல்ஐசி. ஆனால் அவர் நெய்க்குதான் அலைவார்.

இன்று நாம் காப்பீடுக்கு என வாய்ப்புகள் தேட விரும்பினால், ஏதோவொரு தனியார் நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறோம். நம் வீட்டுக்கே வந்து தேநீர் சாப்பிட்டுக் கொண்டு நம் வாழ்க்கையை சிரத்தையுடன் ஆராய்ந்து காப்பீடை பற்றி யோசனை வழங்கும் அந்த எல்ஐசி முகவர் இன்று இல்லை. தொலைபேசியில் இயந்திரக் குரல் ஒன்று இந்தி வேண்டுமா, ஆங்கிலம் வேண்டுமா எனக் கேட்டு ஒரு பொத்தானை அழுத்தச் சொல்கிறது.

தனியார்மயம் என்கிற ராட்சத விலங்கு நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது. நம் பக்கம் நிற்க வேண்டிய ஒன்றிய அரசு ராட்சத விலங்கின் பக்கம் நின்று நம்மை இரையாக்கிக் கொண்டிருக்கிறது. எல்ஐசி மட்டும் கலாசார நினைவாக நம் சமூகத்தின் ஆழ்மனதில் எஞ்சிக் கிடக்கிறது.

Also Read: காலக்கெடுவை நெருங்கும் பூமி.. 2030ல் வரப்போகும் ஆறாம் பேரழிவை தடுக்க செய்ய வேண்டியது என்ன?