
தமிழ்நாடு அரசின் சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை வர்த்தக மையத்தில் 5.1.2026 அன்று மாலை 3:30 மணி முதல் 6:30 மணியளவு வரையில் 10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உள்ள மாபெரும் நிகழ்வின் முன்னோட்டமாக காலை 9:30 மணி அளவில், தமிழ்நாடு அரசு நடத்தும் இரு நாள் (05.01.2026 முதல் 06.01.2026 வரையிலான) தொழில்நுட்பக் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தனர்.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற மகாகவி பாரதியின் தொடருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கி, அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிடவும், உலகளாவிய திறன்களைக் கற்றுத் தேர்ந்திடவும் வழிகாட்டும் நோக்கில் 40 அரங்குகளுடன் பல்வகைத் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டுச் சிறப்பித்தனர்.
‘புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன்' போன்ற முன்னோடியான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்து, மாணாக்கர்களின் டிஜிட்டல் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கிலான தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு மேலும் ஒரு மணிமகுடமாய் இந்தக் கண்காட்சி மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டு உயர்கல்வித் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மாநிலத்தின் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு - வாரியான 40 கண்காட்சி அரங்குகளில், தமிழ்நாட்டு மாணாக்கர்கள் உருவாக்கிய புதுமையான படைப்புகள், பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT), தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO), Start up TN, TN Guidance bureau போன்ற தொழிலமைப்புத் துறைகள் தங்களின் துறை சார்ந்த நவீனத் தயாரிப்புகள், தொழில் முன்னேற்றங்கள் மற்றும் புதுமையான தீர்வுகளை மாணாக்கர்கள் நேரடியாகக் கண்டறியக்கூடிய வகையில் காட்சிப்படுத்தியுள்ளன.
திறன்மேம்பாட்டு மையம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மூலம் மாணாக்கர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்புகளும், திறன் மேம்பாட்டு முயற்சிகளும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் அனுபவங்களும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உயர்கல்வி துறையுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் கழகமும் செய்தி & மக்கள் தொடர்புத் துறையும் தாங்கள் அமைத்துள்ள அரங்குகளின் மூலம் பொதுக் கற்றல் வளங்கள், கல்வித் தகவல்கள் மற்றும் அரசு முன்னெடுப்புகளை மாணாக்கர்கள் நன்கு அறிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி ஒழுங்கு செய்துள்ளது.
நவீனத் தொழில்நுட்பங்களைக் கற்றறிவதிலும், புதுமையான தீர்வுகளைக் கண்டறிவதிலும் மாணாக்கர்கள் காட்டும் ஆர்வமும் படைப்பாற்றலும் இக்கண்காட்சியில் அவர்கள் அதிகமாகப் பங்கேற்பதன் மூலம் மேன்மேலும் ஊக்கப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு (AI), குறியீட்டு முறை (Coding), பசுமைத் தொழில்நுட்பம் (Green technology) போன்ற பல்வேறு துறைகளில் மாணாக்கர்கள் எதிர்கொண்டு வெல்லும் புதிய சவால்களை இந்தக் கண்காட்சி பிரதிபலித்துள்ளது.
தொழில்துறையுடன் இணைந்து செயல்பட முனைந்துள்ள தற்போதைய தலைமுறை மாணாக்கர்களின் கற்றல் முனைப்பும் திறன் மேம்பாட்டு ஈடுபாடும் அரசின் இந்தக் கண்காட்சி மூலம் விரிவடைகின்றன.
ட்ரோன் தொழில்நுட்பங்கள், அவற்றைப் பரிசோதிக்கும் மையங்கள், ஆளில்லா ட்ரோன்கள், தொலை உணரி (ரிமோட் சென்சார்), வனங்களில் காட்டுயிர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கான ட்ரோன் தொழில்நுட்பங்கள், நவீன வரைபடங்கள், திரும்பப் பெறக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னிறைவான விண்கலத் தொழில்நுட்பம், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (ISRO) தொழில்நுட்பத்தை உட்படுத்திய பல்வகைச் செயற்கைக்கோள் பரிசோதனை முயற்சிகள், மின் வாகனங்கள் (Electric Car, Battery Car), பலூன் ராக்கெட், ரோபோட்டிக் தொழில்நுட்பங்கள், மெய்நிகர் உண்மை (Virtual Reality), செயற்கை நுண்ணறிவு (AI) எனப் பல்வேறு நவீன அறிவியல் துறைகள் சார்ந்த நாற்பது அரங்குகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மாணாக்கர்களுக்குப் பரந்து விரிந்த தளத்தில், புதிய வாய்ப்புகளை அடையாளம் காட்டும் நோக்குடன், தமிழ்நாடு அரசாங்கத்தால் இக்கண்காட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் பயனடைந்து கல்வியிலும் ஆய்விலும் வாழ்விலும் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த இலக்குடன் 2026 ஜனவரி 05 மற்றும் 06 ஆம் தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த மாபெரும் கண்காட்சி நடத்தப்பெறுகிறது.








