உலகம்

காலக்கெடுவை நெருங்கும் பூமி.. 2030ல் வரப்போகும் ஆறாம் பேரழிவை தடுக்க செய்ய வேண்டியது என்ன?

உலக வெப்பம் 2 டிகிரி செல்சியஸ்ஸுக்கு உயர்ந்தால் நிலப்பரப்பை சுற்றியுள்ள கடல்மட்டம் 10 செண்ட்டிமீட்டருக்கு உயர்ந்துவிடும்.

காலக்கெடுவை நெருங்கும் பூமி.. 2030ல் வரப்போகும் ஆறாம் பேரழிவை தடுக்க செய்ய வேண்டியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆறாம் பேரழிவு!

உலகில் உள்ள பெரும்பான்மை உயிர்கள் அழிந்துபோவதே பேரழிவு என சொல்லப்படுகிறது. அழிவது என்றால் கொல்லப்படுவதோ இறப்பதோ இல்லை. குறிப்பிட்ட உயிரினம் மீண்டும் பிறக்க வாய்ப்பே இல்லாமல் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிந்து போவது.

பூமி இதுவரை ஐந்து பேரழிவுகளை சந்தித்துள்ளது.

முதல் பேரழிவு 44 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அது உயிரினங்கள் உருவாகத் தொடங்கியிருந்த காலம். 44 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் எல்லாமே கடல் வாழ் உயிரினங்கள்தான். சரியாக சொல்வதெனில் கடலில் வாழ்ந்த நுண்ணுயிரிகள். கடலின் பெரும்பகுதி உறைந்தது. பூமியின் கடற்பரப்பு மொத்தத்தையும் பனித்தட்டுகள் மூடியது. கடலுயிர்கள், வாழ்வதற்கான வெளிச்சமும் உணவும் இன்றி அழிந்தன.

37 கோடி ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் பேரழிவு நிகழ்ந்தது. செடிகள் உருவாகத் தொடங்கியிருந்த காலகட்டம். செடிகள் வெளியேற்றிய கார்பன் வாயு வானிலையை மாற்றியது. உயிர் வாழ்க்கைக்கான சூழலில் சின்ன குலைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட எல்லா உயிர்களும் வழக்கொழிந்து போயின.

மூன்றாம் பேரழிவு 25 கோடி வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் தோன்றியிருந்த காலகட்டம். கடல் மட்டங்கள் மாறியதாலும் மீத்தேன் வாயு பெருமளவுக்கு வெளியானதாலும் 90% உயிரினங்கள் அழிந்து போயின.

காலக்கெடுவை நெருங்கும் பூமி.. 2030ல் வரப்போகும் ஆறாம் பேரழிவை தடுக்க செய்ய வேண்டியது என்ன?

20 கோடி வருடங்களுக்கு முன் நான்காம் பேரழிவு நிகழ்ந்தது. வெடித்து கிளம்பிய எரிமலைக் குழம்பு உருவாக்கிய அதிக கார்பன் வாயு, பேரழிவுக்கான காரணம். உயிர் தோற்றத்தில் கடைசியாக தோன்றியிருந்த டைனோசர்கள் நான்காம் பேரழிவுக்கு பின்னரே வேகமாக பரிணாம ஏணியை பற்றியேறி மேலே வந்தன.

கடைசியான ஐந்தாம் பேரழிவு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. 76 சதவிகித உயிர்கள் அழிந்தன. இதில்தான் நாமெல்லாம் அறிந்த பிரபலமான டைனோசர்களும் அழிந்து போயின. வானிலிருந்து விண்கல் ஒன்று விழுந்து டைனோசர்களை அழித்து, மொத்த அழிவையும் முடித்து வைத்தது. ஐந்து பேரழிவுகளுக்கு பின்னரே நமக்கான பிறப்பை இயற்கை குறித்தது. நம் எல்லாருக்கும் முன்னோர்களான குரங்குகளின் பரிணாம வளர்ச்சி தொடங்கியது.

ஐந்து பேரழிவுகளிலும் நடக்காத ஒரு விஷயம் தற்போதைய ஆறாம் பேரழிவில் நடந்து கொண்டிருக்கிறது. உயிர் வாழ்க்கைக்கான சூழல் இப்போது பாதிக்கப்பட்டிருப்பது வெளியிலிருந்து வந்த எரிகல்லாலோ அல்லது எரிமலை வெடிப்பாலோ அல்ல. இதே உயிர் வாழ்க்கைக்குள் இருந்து கொண்டிருக்கும் ஓர் உயிரால். மனிதனால்!

18ம் நூற்றாண்டு வரை, பூமியிலிருந்து வெளிப்பட்ட கார்பன் வாயுக்கள் குறைவாகவே இருந்தன. மிக முக்கிய திருப்பம் ஒன்று அந்த நூற்றாண்டில் நிகழ்ந்தது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொழிற்புரட்சி நிகழ்ந்தது. பெரிய அளவிலான உற்பத்திகள், வணிகத்துக்காக முன்னெடுக்கும் பாணி உருவானது. பூமி கொண்டிருந்த வளங்கள் அளவின்றி கொள்ளையடிக்கப்பட்டன. புதைபடிமத்தில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள், நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு ஏற்றம் பெற்றன. புதைபடிம எரிபொருட்கள் வெளியிடும் கார்பன் வாயுக்களின் அளவை பற்றி எவருமே யோசிக்கவில்லை.

வளிமண்டலத்தில் கார்பன் வாயுக்களை அதிகமாக்கும் நாடுகளின் வரிசையில் சீனா, அமெரிக்கா, இந்தியா, கனடா, ரஷ்யா இருக்கின்றன. எல்லா பாதிப்புகளையும் உருவாக்கிவிட்டு, தற்போது அழியப்போகும் அவசரத்தில் தீர்வு காண வேண்டி 2015ம் ஆண்டில் உலக நாடுகள் பாரிஸில் கூடி விவாதித்தன.

காலக்கெடுவை நெருங்கும் பூமி.. 2030ல் வரப்போகும் ஆறாம் பேரழிவை தடுக்க செய்ய வேண்டியது என்ன?

புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை மிக வேகமாக குறைக்க அல்லது நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உலகம் அடையும் வெப்பத்தை 1.5 டிகிரியிலிருந்து இரண்டு டிகிரி செல்சியஸ்ஸுக்குள் நிறுத்தி, குறைக்க தொடங்க வேண்டுமென தீர்மானம் முன்மொழியப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த ஒத்துழைப்பை நாடுகள் கொடுக்கவில்லை.

உலக வெப்பம் 2 டிகிரி செல்சியஸ்ஸுக்கு உயர்ந்தால் நிலப்பரப்பை சுற்றியுள்ள கடல்மட்டம் 10 செண்ட்டிமீட்டருக்கு உயர்ந்துவிடும். இந்தியாவுக்கு அருகிலேயே இருக்கும் மாலத்தீவுகள் மூழ்கும் கட்டத்தை தற்போது நெருங்கியிருக்கிறது. 1,5 டிகிரி செல்சியஸ்ஸுக்குள் புவி வெப்பத்தை கட்டுப்படுத்த வேண்டுமென தீர்மானித்த 2015லிருந்து நான்கு வருடங்களில் 1 டிகிரி செல்சியஸ்ஸை எட்டி விட்டோம். தற்போதைய கார்பன் வெளியீட்டை 45%மாவது குறைக்க வேண்டும்.

1.5% டிகிரிக்குள் புவி வெப்பத்தை அப்போதுதான் கட்டுப்படுத்த முடியும். அதற்கான காலக்கெடு 2030ம் ஆண்டு. அதாவது இன்னும் ஒன்பது வருடங்கள்! ஆறாம் பேரழிவின் இறுதியை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பேரழிவின் இறுதியை பார்க்க மனித இனம் இருக்காது!

Related Stories

Related Stories