Tamilnadu

'பொய் வழக்கு போட்ருவேன்..' : வியாபாரியை மிரட்டி ரூ. 10 லட்சத்தை பறித்த பெண் போலிஸ் அதிரடி கைது!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் கொங்கன். இவரது மகன் அர்ஷத். இவர் பேக் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். தனது வியாபாரத்திற்காக பொருட்களை வாங்க ரூ.10 லட்சம் எடுத்துக் கொண்டு கடந்த ஜூலை 5ஆம் தேதி மதுரை வந்துள்ளார்.

மேலும், தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்குவதற்காக அர்ஷத் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தனியார் தங்கும் விடுதி அருகே காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி மற்றும் பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் அர்ஷத் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை மிரட்டிப் பறித்துக் கொண்டனர்.

பின்னர் அர்ஷத் காவல்நிலையம் சென்று ஆய்வாளர் வசந்தியிடம் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார். இதற்கு அவர் பணத்தைத் தர முடியாது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அர்ஷத் ஜூலை 27ம் தேதி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வசந்தி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பால்பாண்டி, உக்கிர பாண்டி, கார்த்திக் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமறைவானதை அடுத்து அவரை போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நீலகிரி மாவட்டத்தில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்ற போலிஸார் வசந்தியை கைது செய்தனர். அதேபோல் வசந்தியின் உறவினர் குண்டு பாண்டிராஜ் என்பவரையும் போலிஸார் கைது செய்தனர்.

Also Read: உஷார் மக்களே.. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் வேலை எனக் கூறி 30 பெண்களிடம் மோசடி : அதிர்ச்சி சம்பவம்!