Tamilnadu

“ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு வக்காலத்து வாங்கும் எச்.ராஜா” : ரூ.600 கோடி மோசடியில் பா.ஜ.க-வுக்கு தொடர்பா?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள். இவர்களில், கணேஷ் பா.ஜ.க வர்த்தகப் பிரிவில் பொறுப்பு வகிக்கிறார். பா.ஜ.க தலைவர்கள் எல்.முருகன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் கணேஷ் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளனர்.

கணேஷ்- சுவாமிநாதன் இணைந்து கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிலும் பல தொழில்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் வைத்துள்ளனர். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம்வந்ததால் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், இவர்களது பைனான்ஸ் நிறுவனத்தில், முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என கூறி வர்த்தகர்கள், பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர். இப்படி இந்த சகோதரர்கள் பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 600 கோடி மோசடி செய்துள்ளனர். பலர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் உட்பட 10 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹெலிகாப்டர் சகோதரர்கள் எந்தவிதமான மோசடியிலும் ஈடுபடவில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, “ஹெலிகாப்டர் சகோதரர்கள் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை. இவர்கள் மோசடி செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் வேண்டும் என்றே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இவர் ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் பணம் கேட்டு மிரட்டினார். பணத்தை இவர்கள் தராததால் வழக்குப் பதிவு செய்துள்ளார். இது குறித்து சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்த பணத்தை அக்கட்சிக்கு அதிகளவில் நன்கொடையாக கொடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். இதனால் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகளையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது.. பா.ஜ.க மீது சந்தேகத்தை கிளப்பும் பொதுமக்கள் !