Tamilnadu

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் 7 லட்சம் மதிப்பில் ரத்தம் சேமித்து வைக்கும் இயந்திரத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா கலந்து கொண்டார். இதன் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் 25 ஆக்சிஜன் சிலிண்டர்கள், செரிவூட்டிகள், ரத்தம் சேமிக்கும் கருவிகள் உள்ளிட்டவைகளை அமைச்சர் ரகுபதி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் உயர்நீதிமன்றம் காட்டியுள்ள அடிப்படை காரணங்களை கருத்தில் கொண்டு அதை அடிப்படையாக வைத்து ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறைகளை எடுத்துக்கூறி அதை நிவர்த்தி செய்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிச்சயமாக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும், ஏழு தமிழர்கள் விடுதலையில் குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மனு கொடுத்துள்ளார். அதற்கு டியரசுத் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.

இல்லையென்றால் சட்டவல்லுனர்களை கலந்தாலோசித்து அதன்பிறகு நடவடிக்கை மேற்கொள்வோமே தவிர இதில், எந்தவித முரண்பாடுகளுக்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது. தமிழகத்தில் லாட்டரி தடைசெய்யப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைனில் நம்பர் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உண்டு” : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!