Tamilnadu

“ஏ.சி இருக்குற வீடுதான் டார்கெட்... திருடிய பணத்தில் ஸ்டார் ஹோட்டல் வாசம்” - அதிரவைத்த ‘பலே’ திருடன்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்தாண்டு ஜூலை மாதம் வரை 6 வீடுகளில் கொள்ளை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையை தடுக்கும் வகையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டன. கேமராக்களில் பதிவான காட்சிகள், கொள்ளை நடந்த இடங்களில் பதிவாக கைரேகை ஆகியவற்றை வைத்து போலிஸார் விசாரித்து வந்தனர்.

இதில், தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் கள்ளம்புளியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக் (38) என்பவர் வீடுகளில் புகுந்து நகை திருட்டு மற்றும் வழிப்பறி, இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் தேடப்பட்டு வந்த ரவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட திருடன் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவி தனியாகவேதான் எங்கும் திருடச் செல்வார் என்றும் கொள்ளையடிக்கும் பணத்தில் தன்னுடைய வழக்கு செலவிற்காக குறிப்பிட்ட பணத்தை வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தில், ஸ்டார் ஹோட்டல்களில் தங்கி மது, மாது என உல்லாசமாக வாழ்வார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், இவர் ஏ.சி இருக்கும் வீடுகளில் மட்டுமே கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஏ.சி வசதி உள்ள வீடுகளில் இருப்பவர்கள் குளிரில் நன்றாக அசந்து தூங்குவார்கள் என்பதால் எளிதாக வந்த வேலையை நிறைவேற்றி விடலாம் என்பதுதான் இவரது திட்டமாம்.

ரவியிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 64 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

Also Read: ஒரே கோயிலை குறிவைத்து ‘சனிக்கிழமைகளில் மட்டும்’ திருடும் நூதன கொள்ளையன்... போலிஸ் வலைவீச்சு!