Tamilnadu
அரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்!
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.
அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பெறுவது வெகுவாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!