Tamilnadu
“தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக செயல்படுவோம்” : பொருளாதார ஆலோசனைக் குழுவினரின் கருத்துரை!
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நேற்று (9.7.2021) காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், உரையாற்றிய ஆலோசனைக் குழுவின் பொருளாதார வல்லுநர்கள், தமிழ்நாடு “திராவிட மாடல்” வளர்ச்சி குறித்து தங்களது கருத்துரைகளை வழங்கினர்.
நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றி இக்கூட்டத்தைத் துவக்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்குக் காரணமான ‘திராவிட மாடல்’ வளர்ச்சி குறித்து பொருளாதார ஆலோசனைக் குழுவினரிடம் எடுத்துரைத்து, தமிழ்நாடு கண்டு வரும் வளர்ச்சியை எதிர்காலத்தில் மேலும் உயர்த்திடவும், இந்த வளர்ச்சியின் பயன்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நமது சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.
திருமதி. எஸ்தர் டஃப்லோ!
அவரைத் தொடர்ந்து பேசிய பொருளாதார அறிஞர் திருமதி. எஸ்தர் டஃப்லோ பேசுகையில், பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கை கள் தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் எனவும் சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பிரிவினரின் நலனுக்கு, குறிப்பாக முதியோரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ரகுராம் ராஜன்!
அடுத்ததாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேசுகையில், கொரோனா பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும் எனவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அரவிந்த் சுப்ரமணியன்!
அவரைத்தொடர்ந்து பேசிய ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், உற்பத்தித் துறை, சேவைத்துறை மற்றும் உயர்கல்விபோன்ற பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத் தக்கூடிய வகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்திட வேண்டும் என்றும் இத்தகைய வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை, குறிப்பாக மின் வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஜீன் டிரீஸ்!
அடுத்து பேசிய பேராசிரியர் ஜீன் டிரீஸ் அவர்கள், அரசின் செயல்பாடுகளில் வெளிப் படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், ஏழை எளியோர்க்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
எஸ்.நாராயண்!
அடுத்து முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளர் எஸ்.நாராயண் பேசுகையில், அரசுத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பல்வேறு அரசு அமைப்புகளின் செயல்திறனை உயர்த்திட வேண்டும் என்றும், வரி நிர்வாகம் சரியாக முறைப்படுத்தப்பட்டு அரசின் வருவாய் பெருக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இறுதியாக, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நன்றியுரை ஆற்றினார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!