Tamilnadu

1 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய 'வில்லேஜ் குக்கிங்' சேனல்!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். மேலும் கொரோனா நிதி எவ்வளவு வந்துள்ளது என்றும் தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களுக்குத் தெரியும் விதமாக அறிவித்து வருகிறது.

இந்நிலையில், 'வில்லேஜ் குக்கிங் சேனல்' யூ-டியூப் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்ற தென்னிந்தியாவின் முதல் யூ-ட்யூப் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கான அங்கீகாரமாக டைமண்ட் பட்டனையும் யூ-ட்யூப் நிறுவனம் இவர்களுக்கு அளித்துள்ளது.

இதையடுத்து யூ-ட்யூப் சேனலில் கிடைத்த வருமானத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினர் வழங்கினர்.

இதுகுறித்து 'வில்லேஜ் குக்கிங் சேனல்' யூ-டியூப் குழுவினர் கூறுகையில், "கொரோனாவை எதிர்த்து தமிழ்நாடு அரசு பல்வேறு விதமாகப் போராடி வருகிறது. அரசுக்கு உதவி செய்யும் விதமாகவும், மக்களுக்கு நமது உதவி நேரடியாகச் சென்று சேரும் விதமாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாக கொரோனா நிவாரண நிதி வழங்கினோம்.

முதலமைச்சரை நேரில் சந்திப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த வாழ்ப்பை எங்களுக்கு வழங்கினார்கள். கொரோனா நிதியை வாங்கிக் கொண்டு, 'நீங்க நல்லா பண்றீங்க' எனச் சொல்லி எங்களிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிராமத்து இளைஞர்களான எங்களைத் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தைச் சேர்ந்த 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினர் இன்று ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்று தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இவர்களது மைல்கல் சாதனைக்கும், மனிதாபிமான உதவிக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Also Read: “மக்களோடு மக்களாக”: எளிமையான பொருளாதார மேதை ஜீன் ட்ரெஸ்.. சரியாக அடையாளம் கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!