Tamilnadu

வேலை வாங்கித் தருவதாகக் கூறி புதுச்சேரியில் மோசடி செய்துவந்த நபர் திருவண்ணாமலையில் கைது!

புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில் என்பவர் இன்று புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவில் ஒரு புகார் கொடுத்தார். அவரது புகாரில், ஒருவர் தன்னை தமிழ்நாட்டின் மண்டல அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தனக்கும், தனது உறவினர் ஒருவருக்கும் தமிழ்நாட்டில் வேலை வாங்கித் வருதாக கூறி ரூ. 25,000 பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

போலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். குற்றவாளியை பிடிப்பதற்காக சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுபம் சுந்தர் கோஷ் மேற்பார்வையில் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ், உதவி ஆய்வாளர்கள் நந்தகுமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் செந்தில் உள்ளிட்ட சிலரிடம் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தை பெற்று மோசடி செய்தவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜீவ் காந்தி எனத் தெரியவந்தது.

விசாரணையின் அடிப்படையில் சைபர் கிரைம் போலிஸார் ராஜீவ் காந்தியை பிடித்து விசாரித்தபோது அவரும் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 25,000 கைப்பற்றப்பட்டது.

பின்னர், ராஜீவ் காந்தி புதுச்சேரி தலைமை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி பிறகு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் திறமையாக செயலாற்றி குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Also Read: “மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்களிடம் இருந்து ஒரு பைசா கூட பெறப்படாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு!