Tamilnadu

₹500 கோடி கோவில் நிலங்களை மீட்டு அதிரடி; ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் சேகர்பாபு

தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான ₹500 கோடி மதிப்பிற்கு மேலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மயிலை வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து ஆதிமூலம் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான அஞ்சுகம் தொடக்க பள்ளியிலும் ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஆதிமூலம் பெருமாள் திருக்கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் 200 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் ₹7.5 லட்சம் ஆண்டு வருமானமாக கிடைப்பதாக கூறினார். 1960ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இந்த கோயிலில், 60 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

Also Read: "கோவில் நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் பார்க்காமல் அகற்றப்படும்" : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான 500 கோடி மதிப்பிற்கு மேலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் எந்தவித செயல்பாடும் இல்லாததற்கு இந்து சமய அறநிலையத்துறையின் சீர்கேடுகளே சான்று என பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடு உள்ளது என்றார்.

எனவே அறநிலையத்துறை வெளிப்படையாக செயல்படுகிறது என்கிற வகையில், வரவு செலவு கணக்கை அறிக்கையாக வெளியிடுவது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Also Read: “அதிமுக ஆட்சியில் மீட்கப்பட்ட கோயில் நில பட்டியலை வெளியிட தயாரா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு சவால்!