Tamilnadu

மாநில பாடத்திட்டத்தை CBSE-க்கு மாற்றுவதற்கான மறைமுக வேலை NEET - திமுக எம்பி வில்சன் சாடல்!

நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய பி.வில்சன் மூத்த வழக்கறிஞர் நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டியிடம் கொடுத்த மனு கொடுத்துள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மத்திய அரசால், மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் எனும் நுழைவுத்தேர்வினால் கடந்த நான்கு வருடங்களாக, தமிழகத்தை சார்ந்த, குறிப்பாக சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய மாணவ மாணவியர்களின் மருத்துவக்கல்வி கனவும் - நம்பிக்கையும் சிதைக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைத் தவிர்த்து தேவையின்றி திணிக்கப்பட்ட இந்த நீட் எனும் கூடுதல் தேர்வு காரணமாக, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களில் உள்ள மாணவ மாணவியர்கள் மனசோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கப்படுதோடு, நீட் தேர்வு பயிற்சி மையம் என்கிற பெயரில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் சில பயிற்சி மையங்களால், பெரும் நிதிச்சுமைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

நீட் தேர்வானது மாநில வழி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் கல்வியை அர்த்தமற்றதாக்கி, மாநில வழி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களை , சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றும் மறைமுக வேலைகளை செய்துகொண்டிருக்கிறது.

Also Read: “நீட் வேண்டாம்.. என் மகளின் கனவை நனவாக்குங்கள்” - நீதியரசர் ராஜன் குழுவிற்கு ரிதுஸ்ரீயின் தந்தை கடிதம்!

நீட் தேர்வு தொடர்பான எனது எதிர்ப்பினை பதிவு செய்யும் அதே வேளையில்,

(I) சேர்க்கைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மாநிலங்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை நீட் தேர்வால் அவை கட்டுப்படுத்துகிறதா ?

(II) நீட் தேர்வு என்பது ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு உருவக்கப்பட்ட ஒரு சமச்சீர் தேர்வு முறையா? எளியவர்களுக்கு வாய்ப்பினை மறுப்பதன் மூலம், சமுதாயத்தின் பணக்கார மற்றும் உயர்ந்த வர்க்கத்தை மட்டுமே நீட் தேர்வு ஆதரிக்கிறதா?

(III) மத்திய அரசின் சிபிஎஸ்சி கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு எளிதாகவும், அதே சமயம் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தகர்க்கிறதா ?

போன்ற கேள்விகளையும் எழுப்ப விரும்புகிறேன்.

மேலும், மக்கள் நலன் மற்றும் கல்வி தொடர்பாக மாநிலங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளை பின்பற்றுவதன் மூலமே, கல்வியின் தரத்தை பாதுகாத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் தரமான , சம வாய்ப்புள்ள நீட்டுக்கு மாற்று சேர்க்கையை தமிழக அரசு புதிய சட்டம் மூலம் இயற்றி வழங்க முடியும்.

எனவே, தமிழகத்தில் ஏற்கனவே மாணவர் சேர்க்கை தொடர்பாக கலைஞர் அவர்கள் 2007ல் கொண்டு வந்து அமலில் இருந்த, நுழைவுத்தேர்வினை இரத்து செய்யும் தமிழ் நாடு அரசு சட்டம் 3/2007 ஐ கவனத்தில் ஏற்று மதிப்பெண்களின் இயல்பாக்கம் (Normalisation of Marks) மூலம் பல் மற்றும் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்கையை கடைபிடிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.”

பி.வில்சன் கமிட்டியை கேட்டுக்கொண்டார்.”

Also Read: “ஏற்றத்தாழ்வின் உச்சம் NEET; தேர்வு என்ற பெயரிலான கொலைக்களம் அது” - தி.மு.க இளைஞரணி, மாணவரணி கூட்டறிக்கை!