Tamilnadu

“நீட் வேண்டாம்.. என் மகளின் கனவை நனவாக்குங்கள்” - நீதியரசர் ராஜன் குழுவிற்கு ரிதுஸ்ரீயின் தந்தை கடிதம்!

உயிரைக் காவு வாங்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனக்கோரி, நீட் தேர்வால் உயிரிழந்த ரிதுஸ்ரீயின் தந்தை செல்வராஜ், தமிழ்நாடு அரசால் நீட் தாக்கத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய கடிதத்தின் விவரம் வருமாறு:

கடந்த 2019ம் ஆண்டு நீட் தேர்வின் பயத்தால் உயிரிழந்த மாணவி ரிது ஸ்ரீயின் தந்தை செல்வராஜ் எழுதும் கடிதம். எங்களின் ஒரே ஒரு மகள் ரிதுஸ்ரீ. சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடும், மிகுந்த ஆசையோடும் வளர்ந்து வந்தாள். நன்றாக படிக்கக்கூடிய மாணவி. கடந்த 2019ம் ஆண்டு 12ம் வகுப்பில் 471 மதிப்பெண் எடுத்தாள். நீட் தேர்வினையும் எதிர்கொண்டு எழுதினாள். ஆனால் மதிப்பெண் என்னவாக வருமோ, மருத்துவ கனவு வீணாகப் போய்விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.

எங்கள் குடும்பத்தில் முதல்முறையாக மருத்துவராகி இந்த சமுதாயத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே எதிர்காலமே கூறி வருவாள். எங்கள் மகளின் எதிர்காலமே எங்கள் எதிர்காலம் என்று நம்பி இருந்தோம். ஆனால் அந்தக் கனவு நனவாகவில்லை. கிடைத்த கூலி வேலையைச் செய்தால்தான் நாளை உணவிற்கு ஆதாரம் என்பதுதான் எங்கள் குடும்பத்தின் நிலை.

இந்நிலையில் தனியார் நீட் பயிற்சி மையங்களில் சேர்த்து படிப்பதற்கு எங்களால் இயலாது. எங்கள் ஏழை வீட்டு ஒற்றை செல்லப்பிள்ளையைப் போல் பல எண்ணற்ற ஏழைப் பிள்ளைகள் மருத்துவர் கனவை சுமந்து நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களாவது மருத்துவர்களாகி அவர்களின் மூலம் என் மகளின் கனவை நனவாக்குங்கள் என்று மாண்புமிகு நீதியரசர் அவர்களையும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் மிகுந்த உருக்கத்துடன் கண்ணீர் மல்க கேட்டுக்கொள்கிறோம்.

உயிரைக் காவு வாங்கும் நீட் தேர்வை ரத்து செய்து மருத்துவ மேற்படிப்பிற்குப் பழைய முறையினையே தொடர வேண்டுகிறோம்.”

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.. ஆராய்ந்த பிறகு இறுதி அறிக்கை”: ஏ.கே.ராஜன் பேட்டி!