Tamilnadu

அ.தி.மு.க ஆட்சியின் கோர முகம் : மலக்குழியில் சிக்கி பலியான 203 தூய்மைப் பணியாளர்கள் - அறிக்கையில் தகவல்!

நாடு அபார வளர்ச்சி அடைந்து வரும் இந்த சூழலிலும் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக, மனித கழிவுகளை மனிதனே அள்ள தடை செய்யப்பட்டும்கூட இன்னும் தூய்மைப் பணியாளர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த கொடுமையால் ஆண்டுதோறும் பல தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் தொழிலாளிகள் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் தொட்டிகளை தூய்மை பணிசெய்யும்போது, அதில் இருந்து வெளியாகும் விஷவாயு தாக்கி மரணம் அடைவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு 1993ம் ஆண்டு முதல் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணியில் ஈடுபட்டதால் 801 தூய்மைப் பணியாளர்கள் இறந்துள்ளதாக மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளர்களுக்கான தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணையம் அன்மையில் இதுதொடர்பான தகவலை வெளியிட்டது.

இந்நிலையில், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணியில் ஈடுபட்டதால் 203 தூய்மை பணியாளர்கள் இறந்துள்ளதாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்பவர்கள் தொடர்பான தகவலை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் கேட்டு இருந்தது. இதன்படி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்த பாஸ்கரன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு இது தொடர்பான அறிக்கையை 2021 ஏப்ரல் மாதம் சமர்ப்பித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் 359 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 189 பேர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு வாரியாக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற பணியின் போது மலக்குழியில் மூழ்கி, விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 1998 முதல் 2021 பிப்ரவரி முதல் உயிரிழந்த 203 பேருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றியது தொடர்பாக இந்தியா முழுவதும் 266 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 37 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், இது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “சமீபத்தில் கூட சென்னையில் பிரபல மாலில் விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். “தூய்மைப் பணியாளர் மரணம் என்பது இனியும் நிகழக் கூடாது” என ஒவ்வொரு முறையும் இதுபோல மரணம் நிகழும் போது சொல்லிவிட்டு கடந்துப்போகிறோம்.

சமூக நீதிக்கும், மனித நேயத்துக்கும் சிறந்த மாநிலமாக இருக்கும் தமிழகம் தூய்மை பணியாளர்களின் இறப்பில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது வேதனை அளிக்கிறது” என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: கார்ப்பரேட்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை; டூவீலர் ஓட்டுபவர்களுக்கு ரூ.33 வரி?: மோடி அரசின் மோசடி!