Tamilnadu

“கட்டுமான பொருட்கள் விலையை குறைக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை” - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைப்பது தொடர்பாக ஸ்டீல் உற்பத்தியாளர்களுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பிற்பகல் ஆலோசனையில் நடத்தினார்.

சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை ஏற்றத்தை அரசு ஏற்காது என்றும் தெரிவித்தார்.

இதுவரை சிமெண்ட் மற்றும் ஸ்டீல் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த விலை ஏற்றத்தை குறைக்க சிமெண்ட் மற்றும் ஸ்டீல் உற்பத்தியாளரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் கட்டுமான பொருட்களின் அதீத விலை ஏற்றத்தை அரசு வேடிக்கை பார்க்காது என்றும் அரசின் நிலைப்பாட்டை உணர்ந்து உற்பத்தியாளர்களே தானாக முன்வந்து விலையை குறைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்ட நளிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் தொகை வழங்குவது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கலை பண்பாட்டுத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், வருங்காலங்களில் செம்மையாக பணியை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா காலம் முடிந்தவுடன் தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பல நிறுவனங்கள் வருவார்கள். ஏற்கனவே புதிய தொழில் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து ஒப்பந்தம் போடவும் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், கீழடி பொறுத்தவரை 7ம் கட்ட ஆய்வில் உள்ளது. தற்போது இந்த ஆய்வில் சில முக்கியமான பொருட்கள் நமக்கு கிடைத்துள்ளது. அதேபோல் அங்கு ஒரு அகழ் வைப்பகம் ஒன்று அமைப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Also Read: பெண் போலிஸுக்கு விலக்கு; ஆண் தாயான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முன்னாள் பெண் காவலரின் உருக்கமான நன்றியுரை