Tamilnadu
“போலி ID மூலம் காசு பார்ப்பது வேதனை அளிக்கிறது” - ட்விட்டர் கணக்கு மோசடி பற்றி நடிகர் சார்லி பேட்டி!
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகர் சார்லி தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு துவங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ட்விட்டர், முகநூல் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் தான் இதுவரை கணக்கு துவங்கவில்லை எனவும், தனது பெயரில் ட்விட்டரில் போலியான கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக நண்பர்கள் மூலம் அறிந்து சென்று பார்த்தபோதுதான் பல்லாயிரக்கணக்கானோர் அந்த கணக்கை பின் தொடர்ந்து வாழ்த்தி வரவேற்றிருப்பது தெரியவந்ததாகவும் கூறினார்.
மேலும், கடந்த 40 ஆண்டு காலமாக தனது துறை மட்டுமல்லாது தனது அன்பிற்குரிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அனைவரும் தன்னுடன் நேரடித் தொடர்பில்தான் இருந்து வருவதாகக் கூறிய அவர், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளக் கணக்குகளை தான் இதுவரை பயன்படுத்தும் அவசியம் வரவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது நண்பர்கள் அறிவுறுத்தலின் பேரில் தன் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கை துவங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாகவும், புகார் அளித்த மாத்திரத்திலேயே காவல் துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தனது பெயரில் போலியாக துவங்கப்பட்ட ட்விட்டர் கணக்கை 30 நிமிடங்களில் சைபர் கிரைம் பிரிவினர் மூலம் முடக்கியுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் அந்த போலி கணக்கை துவங்கிய நபர் குறித்து துரிதமாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஒருவர் பெயரில் போலியான கணக்கு உருவாக்கி அதன் மூலம் லாபம் பெற நினைப்பது வேதனை அளிப்பதாகவும், தனது ரசிகர்கள் அந்த கணக்கை பின்தொடர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!