Tamilnadu

“ஊரடங்கு காரணமாக 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது” - சுகாதாரத்துறை செயலர் பேட்டி!

ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,023 ஆக குறைந்துள்ளது. 31,045 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அரசு சாரா உறுப்பினர்களாக டாக்டர் பி.குகானந்தம், டாக்டர் குழந்தைசாமி, சென்னை தேசிய தொற்றுநோய் ஆய்வு நிறுவன இயக்குநர் மனோஜ் முரேகர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பேட்டியளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கொரோனாவின் அடுத்த அலைகளை தடுப்பது குறித்தும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. தொற்று குறையாத 9 மாவட்டங்களில் நுண்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை என்றும் நாளை முதல் 13-ம் வரை 6.5 லட்சம் தடுப்பூசிகள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விவரங்களை மறைக்காமல் வெளியிட்டு வருவதாகவும், இதுகுறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் 1101 கருப்புப் பூஞ்சை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு வழங்க 3,060 மருந்துகள் மட்டுமே அரசிடம் கையிருப்பு இருப்பதாகவும், இதற்காக 30 ஆயிரம் மருந்துகளை உடனே வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Also Read: “ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்"- பிரதமர் மோடி உரையின் முழு விபரம்..!