Tamilnadu

“ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் கடைகளின் உரிமம் ரத்து” - தமிழக அரசு எச்சரிக்கை!

சில்லறை விற்பனைக் கடைகளில் ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்றால், உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. அரசின் விலைக்குறைப்பு உத்தரவுக்குப் பின்னரும் சென்னையின் சில இடங்களில் ஆவின் பால் பழைய விலைக்கே விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்புக் குழு அமைத்து அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இதில் சென்னையில் 11 சில்லறை விற்பனை நிலையங்களில் ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 11 சில்லறை விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் அணைவரும் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்தார்.

அதில் இரண்டாவதாக மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. முதல்வரின் ஆணைக்கிணங்க பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.05.2021 அன்று துவக்கி வைத்தார்.

இந்த அரசாணைக்கு ஏற்ப அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில், ஆவின் மேலாண்மை இயக்குநரால் உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இதன் அடிப்படையில் சிறப்பு குழு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட போது கீழ்கண்ட 11 சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தது. மேற்கண்ட நபர்களுடைய சில்லறை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

மேலும் இந்த சிறப்பு குழு தினந்தோறும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், இது போன்ற தவறுகளை (நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது) சில்லறை விற்பனை உரிமையாளர்கள் செய்யும் பட்சத்தில் அவர்கள் உரிமம் ரத்து செய்து மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இந்த நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா தொற்று இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!