Tamilnadu

“முழு ஊரடங்கின் பலன் கிட்டும்; கொரோனா நெருக்கடியில் இருந்து தமிழகம் மீளும்” - உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதரிப்பேட்டை, புதுப்பேட்டை (லாங்ஸ் கார்டன்), சேப்பாக்கம் (அருணாச்சலம் தெரு), ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மீர்சாகிப்பேட்டை சென்னை சமுதாய நல மையம், ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவல்லிக்கேணி விக்டோரியா விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் ராயப்பேட்டை வெஸ்லி உயர்நிலைப் பள்ளியில் புதிதாக 300 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் தொடங்குவதற்கான ஆய்வு நடத்தி 350 பல்ஸ் ஆக்ஸி மீட்டர்களை முன்கள பணியாளர்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சொந்த ஏற்பாட்டில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை வார்டுகளை திடீரென ஆய்வு நடத்திய உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்துதல் மற்றும் மருத்துவ தேவைகளை கேட்டறிந்தார்.

Also Read: “கொரோனா பேரிடரிலும் அநாகரிகமாக நடந்து கொள்ளும் யோகி அரசு”: உ.பி-யில் 16 மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சுகாதார நிலைய அடிப்படை வசதிகளை ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் கொரோனா சிகிச்சை மையம் விரைவில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கொரோனாவின் நெருக்கடி நிலையில் இருந்து தமிழகம் மீண்டு வரும். முதலமைச்சர் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அடுத்த பத்து நாட்களுக்கு மக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர வேண்டும் எனவும் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது எனவும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசத்தை பொது மக்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்றார்.

முழு ஊரடங்கின் பலன் அடுத்த ஒரு வாரத்தில் கிடைக்கும் எனவும் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு மற்றும் பகுதி செயலாளர் மதன் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Also Read: “ஒன்றிணைவோம் வா... பேரிடர் காலத்தை வென்றிடுவோம் வா...!” : உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!