Tamilnadu

“கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை உறுதி”:அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கிசான் திட்ட முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேளாண்மைத் துறை செயல்பாடுகள் குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “கடந்த கால ஆட்சியில் பிரதமரின் கிசான் திட்டத்தில் சில பகுதிகளில் நடைபெற்ற தவறுகளால் 116 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடாக கையாடல் செய்யப்பட்ட தொகைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது. வேளாண் துறையில் நடைபெறக்கூடிய திட்டங்களை தவறு நடைபெற வாய்ப்பில்லாமல் செயல்படுத்தப்படும். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடை பெறுகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உழவர் சந்தை முடக்கப்பட்டு உள்ளது. அவற்றை மீண்டும் நடத்தவும் மேலும் பல இடங்களில் புதிதாக உழவர் சந்தை அமைப்பதற்கான ஆய்வு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புதிதாக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வேளாண்மை சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

அதிகளவு உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் மூலம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும். ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் காய்கறிகளை எளிதில் பெற நடமாடும் காய்கறி கடைகள் கொண்டுவரப்படும் திட்டம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

Also Read: “பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு... தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை” - அரசு அதிரடி அறிவிப்பு!