Tamilnadu

கோவிட் அச்சுறுத்தல்: தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்ட தமிழக அரசு; அரசு ஊழியர்களுக்கு புது கட்டுப்பாடுகள்

வீட்டில் இருந்து பணி புரியும் அரசு ஊழியர்கள் அனுமதியின்றி வெளி மாவட்டத்திற்கு செல்லக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், வேலை மற்றும் பணியாளர்களை அடிப்படையாக கொண்டு, அரசு ஊழியர்கள் 50% நபர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், குரூர் ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும். ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர திட்டமிட வேண்டும் என்றும், சுழற்சி முறையில் பணிக்கு வரும் ஊழியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வரும் வகையில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக பணிக்கு வேண்டும்.

தங்கள் பணி புரியும் மாவட்டத்தில் இருந்து பணியாற்றுகிறார்களா என அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும், இந்த உத்தரவுகள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனா சிகிச்சையில் மாபெரும் ஊழல்..” - பா.ஜ.க அரசு மீதே பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ள பா.ஜ.க எம்.பி!