Tamilnadu

அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட ரெம்டெசிவிர் மருந்துகள்.. CCTV காட்சியைக் கைப்பற்றி போலிஸார் விசாரணை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இது இன்னும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்பு நூறுக்கு மேல் பதிவாகி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

தினந்தோறும் கொரேனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகளைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தற்போது கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மருந்துக்கான தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மருத்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி காவல்துறையினர் கள்ளச்சந்தையில் மருந்தை விற்றவர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: மருத்துவமனைக்கு ஜே.சி.பியில் தூக்கிச்சென்ற அவலம் - கொரோனா அச்சத்தால் கர்நாடகாவில் நடந்த கொடுமை!