Tamilnadu

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையா? - உரிய சான்றுகளோடு அவசர உதவி எண்ணை அழைக்கலாம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா அதிக பாதிப்பையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

பல மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட அவசர தேவை உதவிகளுக்காக 104 எனும் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது தமிழக அரசு.

ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்டவை தேவைப்படும் நபர்கள் தமிழக அரசின் மருத்துவ அவசர உதவி எண் 104 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உங்களின் தேவை குறித்தும், எந்த இடம் என்பது குறித்தும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

அரசின் சேவை உதவியாளர் தற்போது எங்கு மருந்து உள்ளது என்பதைக் கூறுவார். அல்லது யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்து அவர்களின் தொடர்பு எண்ணைத் தருவார். அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினால் அவர்கள் மருந்து தற்போது எங்கு ஸ்டாக் உள்ளது என்பதைத் தெரிவிப்பதோடு, உங்களுக்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்வார்கள்.

ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் தேவை என்றால் உதவி எண்ணைத் தொடர்புகொள்வதற்கு முன் நீங்கள் கீழ்கண்டவற்றை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

1.மருத்துவர் அளித்த மருந்துச்சீட்டு.

2.நோயாளியின் கொரோனா பாஸிட்டிவ் சான்று/சி.டி ஸ்கேன் ரிசல்ட்.

3.நோயாளி மற்றும் மருந்து வேண்டுவோரின் ஆதார் அட்டை.

சரியான வழிமுறைகளை மேற்கொண்டு அரசிடம் உதவி கோரினால், இருப்பைப் பொறுத்து உதவி கிடைக்கும். இதனால், பேரிடரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்களைத் தவிர்க்க இயலும்.

Also Read: #CovidUpdates தமிழகத்தில் இன்று மட்டும் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... ஒரே நாளில் 98 பேர் பலி!