Tamilnadu

தமிழ் மொழி புறக்கணிப்புக்கு ‘நீஷப் பாஷை’ என்னும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைதான் காரணமா? - கி.வீரமணி கேள்வி!

தேசிய புதிய கல்விக் கொள்கையை 17 மொழிகளில் மொழிபெயர்த்த மத்திய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி தமிழை மட்டும் தவிர்த்தது ஏன்? ‘தமிழ் நீஷப் பாஷை’ என்ற பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கொள்கைதான் காரணமா? தமிழில் வெளிவந்தால் புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வெடிக்கும் என்ற அச்சம்தான் இதன் பின்னணியா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உலக மொழிகளில் செம்மொழித் தகுதி பெற்றதோடு எம்மொழியான தமிழ்மொழி உலகின் பல நாடுகளில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் - அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்புறு மொழியாக ஆட்சிப் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மொழிகள்’ என்ற தலைப்பில் 22 மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. மற்ற மொழிகளைவிட எழுத்து, பேச்சு, இலக்கணம், இலக்கியம் எல்லாவற்றிலும் தனித்து இயங்கும் தன்மையும், தொன்மை வரலாறும் தன்னகத்தே கொண்ட செம்மொழியே தமிழ்!

என்றாலும், ஆரியத்தின் - சனாதனத்தின் (ஆர்.எஸ்.எஸ். - அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க.வின் கண்ணோட்டத்தில் - ‘நீச்சபாஷை’ - ‘நீஷ பாஷை’) - மக்களால் பேசப்படாத, நடைமுறையில் இல்லாத, 130 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்தியாவில் வெறும் 25,000 பேர் மட்டுமே ‘பேசுவதாக’ கூறப்படும் சமஸ்கிருதம் என்ற அந்த வடமொழி - தி.மு.க. ஆட்சியின்போது, முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சி காரணமாக இந்திய அரசால் செம்மொழித் தகுதி தமிழுக்குக் கிடைத்ததாலேயே அந்த வரிசையிலேயே செம்மொழித் தகுதியையும் பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அது ‘தேவபாஷை’ - ‘கடவுள்’ மொழியாம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே ‘கடவுள் எழுத்து’ என்று ‘Hindi in Devanagri Script’ என்ற சொற்றொடர் (அரசியல் சட்டப் பிரிவு 343) மூலம் ‘தேவபாஷை’ சிம்மாசனம் பெற்ற மொழி! அரசமைப்புச் சட்ட வகுப்பாளர்களின் மிகப்பெரிய தந்திரங்களில் இதுவும் ஒன்றாகும்! என்றாலும் ஆர்.எஸ்.எஸ். - ஆணைப்படி செயல்படும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ் புறக்கணிப்பு என்பது திட்டமிட்டே அவ்வரசின் பற்பலத் துறைகளில் தொடர்ந்து நடந்தேறி வருகிறது!

“ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மற்றொரு கண்ணுக்குச் சுண்ணாம்பு” என்ற ஓரவஞ்சனைதான் சமஸ்கிருதம் என்ற ‘தேவபாஷைக்கும்‘, தமிழ் என்ற ‘நீஷ’ பாஷைக்கும்!

ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என அறிவிக்கப் பட்டதைப் போல், முதல்வர் கலைஞர் ஆட்சியில் தமிழ் ஆண்டு என்று அறிவிக்கக் கேட்கப்பட்டது (வாஜ்பாயி ஆட்சியிலேயே) புறக்கணிக்கப்பட்டது!

செம்மொழித் தமிழ் நிறுவனம் இன்று சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாகி, வெறும் மத்திய பல்கலைக் கழகம் ஒன்றின் இணைப்பாகி விடக் கூடிய சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிடும் தினக் கூலி நிறுவனம் என்ற கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு, தொடர்ந்து நமது உரிமை முழக்கங்களின் ஒலியால் ஏதோ ஒப்புக்கு நடத்தப்படுவதாக காட்சிப்படுத்தப்படுகின்றது இன்று; அவ்வளவுதான்!

புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு கடந்த மூன்றாண்டுகளில் செலவழிக்கப்பட்ட தொகை - 649 கோடி ரூபாய்.

அதன் விவரம் வருமாறு:

2017-2018 இல் - 196 கோடி ரூபாய்

2018-2019 இல் - 214 கோடி ரூபாய்

2019-2020 இல் - 239 கோடி ரூபாய்

செம்மொழி தமிழ் மொழிக்கு வெறும் 22 கோடி ரூபாய்தான்.

அதன் விவரம் வருமாறு:

2017-2018 இல் - 10.59 கோடி ரூபாய்

2018-2019 இல் - 4.65 கோடி ரூபாய்

2019-2020 இல் - 7.7 கோடி ரூபாய்

ஆக மொத்தம் வெறும் 22 கோடி ரூபாய்தான்.

சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 649 கோடி ரூபாய்; தமிழ் மொழியான செம்மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 22 கோடி ரூபாய்தான் - அதுவும் தொடர் வற்புறுத்தல் காரணமாகவே!

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பு என்று வெளிவந்துள்ள மொழிகள் பட்டியலில் - 17 மொழிகளில் மட்டும் மொழி பெயர்க்கப்பட்ட நிலையில் தமிழ் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது தானே!

கன்னடம், மலையாளம், குஜராத்தி போன்ற 17 மொழிகளில் மொழிப் பெருமையில் முன்னுரிமை பெறத் தகுதியானது தமிழ் அல்லவா?

பின் ஏன் புறக்கணிப்பு - அலட்சியம் காரணமா? அல்லது புதிய கல்விக் கொள்கை என்ற நவீன மனுதர்மக் கல்வித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ் மண்ணிலிருந்தும் தானே கிளம்புகிறது என்ற எரிச்சல் காரணமா? தமிழில் வெளிவந்தால் புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வெடிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியா?

இந்த இலட்சணத்தில் பிரதமர் மோடிமுதல் மற்ற வடபுல பா.ஜ.க. தலைவர்கள்வரை சிற்சில நேரங்களில் தமிழ்ப் பெருமை நாமாவளி பாடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை! இது அரசியல் இரட்டை வேடம் அல்லாமல் வேறு என்ன? திருவள்ளுவர், அவ்வையார், பாரதி, ‘திருக்குறள்’ ‘புறநானூறு’ எல்லாம் அவர்களின் உரைகளில் இடம் பெறுவது உதட்டளவில் இல்லாது, உண்மையாக இருப்பின் இந்தப் புறக்கணிப்பும், அலட்சியமும், ஓரவஞ்சகமும் தொடருமா?

இதன் மூலம் ஒப்பனை கலைந்தது. உண்மை உருவம் தமிழ் மக்களுக்குப் புரிந்தது. தமிழ்ப் பெருமையும், தமிழ்ப் பண்பாடும், திராவிட நாகரிகமும் - ஆயிரங் காலத்துப் பயிர்கள்! எதனையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அதற்கு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்துவோம்!” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அரசு தோல்வியடைந்துவிட்டது.. நாம் மக்களுக்கு உதவுவோம்.. இதுவே காங்கிரஸின் தர்மம்” - ராகுல் வேண்டுகோள்!