Tamilnadu

தமிழகத்தில் திடீரென உயர்ந்த சுங்கச்சாவடி கட்டணம் : வாகன ஓட்டிகள் மேல் அடுத்த சுமையை ஏற்றிய மோடி அரசு !

இந்தியாவில் சுங்க கட்டணங்களை நேரடியாகப் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தபோது வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இருந்தபோதும் மத்திய அரசு பாஸ்டேக் முறையை அமல்படுத்தியது.

மேலும், பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துத் துறைக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அன்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி, சுங்கச்சாவடி கட்டணங்களை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள மதுரை - கப்பலூர், விருதுநகர் - சாத்தூர், திருநெல்வேலி - கயத்தாறு, நாகர்கோவில் - நாங்குநேரி ஆகிய நான்கு சுங்க சாவடிகளில் ரூபாய் 5 ரூபாய் முதல் 30 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் படி, கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூபாய் 80ஐ விட அதிகமாகவும் , கனரக வாகனம் மற்றும் பேருந்திற்கு ரூபாய் 270ல் இருந்து 290 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும், மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு ரூபாய் 295ல் இருந்து 315 ஆகவும், மூன்று முதல் ஆறு அச்சு கொண்ட கனரக வானங்களுக்கு ரூபாய் 425ல் இருந்து 450 ஆகவும், ஏழு மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூபாய் 520ல் இருந்து 550 ரூபாயாக கட்டணம் உயர்ந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தற்போது தான் மீண்டு வருகின்றனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கும் வேலையில், சுங்க கட்டண விலையும் உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளைக் கோபமடையச் செய்துள்ளது.

Also Read: “இனி சம்பளத்தின் அளவு குறையும்; EPF வட்டிக்கும் வரி ?” : மக்களை வதைக்கும் புதிய வரிகள் இன்று முதல் அமல் !