Tamilnadu

"பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றினால், மாநிலத்தையே கபளீகரம் செய்துவிடுவார்கள்” : டி.ராஜா பேச்சு!

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில் படுதோல்வியடையும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “5 மாநில தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். இந்திய அரசியல் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு நசுக்கி வருகிறது. பா.ஜ.க வெறும் அரசியல் கட்சியல்ல. இவர்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் என்ற மதவாத அமைப்பு மூளையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால்தான் இந்தியாவில், மதவெறி பாசிச ஆட்சியை நிலை நிறுத்த ஆர்.எஸ்.எஸ்ஸும் பா.ஜ.கவும் துடித்துக்கொண்டிருக்கின்றன. எனவேதான் தமிழகத்தில் பா.ஜ.க காலுன்றி விடக்கூடாது. இவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், தமிழகத்தைக் கபளீகரம் செய்துவிடுவார்கள்.

அதேபோல், அ.தி.மு.க அரசு மாநில உரிமைகள் மற்றும் மாநில நலன்களை காப்பாற்றுவதில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இவர்களைப் பயன்படுத்தி பா.ஜ.க தமிழ்நாட்டில் காலூன்றப் பார்க்கிறது. பா.ஜ.க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி படத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாதது இவர்களின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள் என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “வாக்கு கேட்டு வாங்க; ஆனா இதை செஞ்சிட்டு வந்து பேசுங்க” -அதிமுக கூட்டணிக்கு எதிராக பேனர் வைத்த விவசாயிகள்