Tamilnadu
“வருமான வரிச் சோதனை நடத்துவதற்கு தேர்தல் காலம் தான் கிடைத்ததா?”: மோடி அரசை தோலுரித்த தீக்கதிர் தலையங்கம்!
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அந்தக் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவதுடன் தேசிய பாதுகாப்பு முகமை போன்றவற்றையும் பயன்படுத்தி தனது காரியத்தை சாதித்துக் கொள்வதை நடைமுறையாகவே கொண்டிருக்கிறது பா.ஜ.க. மத்திய அரசு என தீக்கதிர் தலையங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
“அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சி வெற்றி பெறாது” என்ற தலைப்பில் தீக்கதிர் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-
மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் தங்கள் அரசியல் எதிரிகள் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்திஅச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். தங்களின் கட்சிக்கு ஆள்பிடிக்கவும் ஆட்சிக்கு ஆதரவு திரட்டவும் அவற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இதை நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அந்தக் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவதுடன் தேசிய பாதுகாப்பு முகமை போன்றவற்றையும் பயன்படுத்தி தனது காரியத்தை சாதித்துக் கொள்வதை நடைமுறையாகவே கொண்டிருக்கிறது பா.ஜ.க. மத்திய அரசு.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், இதர ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள், செயல் வீரர்கள் போன்றவர்கள் மீது தேசவிரோத பிரிவுகளின் கீழ் வழக்கு, சித்ரவதை, சிறை என அடக்குமுறையைக் கையாள்கிறது.
மத்திய அரசின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது அரசு அமைப்புகள் மட்டுமின்றி அவர்களது பரிவாரங்களின் தாக்குதலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது நாடறிந்ததே. அதே நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உள்ளானோர் இவர்களின் கட்சியில் ஐக்கியமாகிவிட்டால் வருமான வரித்துறையின், அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டு எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும், அத்துடன் அவர்களுக்கு உரிய கவுரவமும் கூட வழங்கப்படும்.
இத்தகைய மிரட்டல், அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் தானே தமிழகத்தின் ஆட்சியாளர்களை தங்களின் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் முதல்வர் இருக்கும் போதே தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்துவதும், அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் கூட நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதும் சாத்தியமாகுமா? அதன் விளைவாகத்தானே தமிழகத்தில் அ.தி.மு.கவின் துணையோடு ‘தாமரை’யை மலரச் செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்காகத்தான் பா.ஜ.கவின் தமிழ்நாடு தலைவரான எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள தி.மு.க, ம.தி.மு.க தலைவர்களின் வீடுகளில் வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியிருக்கிறது. இது அப்பட்டமாகத் தெரிந்துவிடாமல் இருப்பதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
இத்தகைய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் பா.ஜ.க ஆட்சி மீது வெறுப்பையே ஏற்படுத்தும். அவர்களின் அச்சுறுத்திப் பணிவைக்கும் முயற்சி வெற்றி பெறாது. வருமான வரிச் சோதனை நடத்துவதற்கு தற்போதைய தேர்தல் காலம் தான் கிடைத்ததா? இத்தகைய அத்துமீறல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
Also Read
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!