Tamilnadu

‘இந்த அரிசியை மனுஷன் தின்பானா?’: தரமற்ற ரேஷன் அரிசியைக் கொண்டு அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கான பணியை தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.

தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்குள் இருந்த முறையற்ற தொகுதி பங்கீடு காரணமாக அ.தி.மு.க தொண்டர்கள் பலரும், பா.ஜ.க வேண்டாம் என்றும், அ.தி.மு.க வேட்பாளர்களை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் செய்யாமல் எப்படி ஓட்டுக் கேட்டு வரலாம் என அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பல இடங்களில் மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர்.

அந்தவகையில் மதுரை மாவட்டம் தண்டலை அருகே, வாக்குக் கேட்டு வந்த அ.தி.மு.க வேட்பாளருக்கு ரேசன் கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரசியை கொண்டு பெண்கள் ஆரத்தி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போது சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏவாகவும் பதவி வகித்து வருபவர் மாணிக்கம். இவர் கடந்த ஆண்டுகளில் எம்.எல்.ஏவாக இருந்தபோது, தொகுதிக்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக அ.தி.மு.க வேட்பாளர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுகவினர் யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக, அங்கிருந்த கிராம மக்கள் அப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் ரேசன் பொருட்கள் மோசமாக உள்ளதாக கூறி அ.தி.மு.க வேட்பாளரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பகுதி பெண்கள் பலர் ரேசன் கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரசியை கொண்டு ஆரத்தி எடுக்க முற்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் வேட்பாளரை அழைத்துக்கொண்டு பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துகொண்டு திரும்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Also Read: GST, பணமதிப்பிழப்பால் நாதியற்று போன சிறு,குறு தொழில்கள்: வேலை வாய்ப்பை தரும் 1லட்சம் தொழிற்சாலைகள் மூடல்!