Tamilnadu

திமுக தேர்தல் அறிக்கையை வீடுதோறும் கொண்டு போய் செய்தாலே போதும்; திமுகவின் வெற்றி உறுதி: தினகரன் தலையங்கம்

தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பே இதற்கு சான்று என குறிப்பிட்டு, ‘கதாநாயகன்' என்ற தலைப்பில் தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். மொத்தம் 128 பக்கங்களை கொண்ட அந்த தேர்தல் அறிக்கை புத்தகத்தில், 63 தலைப்புகளில் நூறு அல்ல, இருநூறு அல்ல, மொத்தம் ஐநூற்று ஐந்து வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இதை ஆழ்ந்து படித்தால்தான், திமுக மக்கள் நலனுக்காக மட்டும் உழைக்கும் கட்சியல்ல, சமூக நலன், சமுதாய நலன், தமிழக நலன், தமிழர் நலன் காக்கும் போராளி என்பது புரியும். மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசியில் இருந்து காக்க தி.மு.க உறுதிபூண்டுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பால் விலையையும் குறைப்போம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமாக பெரும்பாலான நடுத்தர, ஏழை குடும்பங்களின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது.

அந்த பாதிப்பில் இருந்து மீள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆயிரம் என்ற அறிவிப்பு, அந்த குடும்பத்தினர் வயிற்றில் பால் வார்த்துள்ளது. கல்வி, நகைக்கடன் தள்ளுபடி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 மானியம், மாதந்தோறும் மின் கட்டணம் கட்டும் முறை, லாரிகளுக்கு பதில் குழாய்களில் தண்ணீர் சப்ளை என்று மக்களின் கஷ்டம் அறிந்து அதை தீர்க்க வழி ஏற்படுத்தி தர வாக்குறுதி அளித்து நடுத்தர வர்க்கத்தினரின் மனதில் திமுக இடம் பிடித்துள்ளது. வேலைவாய்ப்பு, மகளிர் நலன், வணிகர், தூய்மை பணியாளர், ஆசிரியர், அரசு ஊழியர்கள், கோயில் பணியாளர்கள், முதியோர், குழந்தைகள், திருநங்கைகள் என அனைத்து தரப்பினரின் வாழ்வு மேம்பட தனித்தனி
அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கோயில்களுக்கு 1000 கோடி, மசூதி, சர்ச்சுகளுக்கு தலா 200 கோடி ஒதுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களிலும் 75 சதவீத வேலை வாய்ப்பு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே என்ற அறிவிப்பு பிற மாநிலத்தவரிடம் குறிப்பாக வட மாநிலத்தவரிடம் வேலை வாய்ப்பு பறிகொடுத்த தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க உள்ள வரப்பிரசாதம். இது தவிர துறை வாரியாகஅறிவிப்புகள் பல. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பாழான தமிழகத்தை வளமாக மாற்றும் அனைத்து அம்சங்களும் தேர்தல் அறிக்கையில் உள்ளது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மற்ற கட்சிகளை காட்டிலும் தி.மு.க முன்னோடி. சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்பது கலைஞரின் வெற்றி முழக்கம். இதை தாரக மந்திரமாக கொண்டு மு.க.ஸ்டாலின் செயல்படுவார் என்பதில் எந்த ஐயமுமில்லை.

தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பே இதற்கு சான்று. திமுகவின் வேட்பாளர் பட்டியலை கதாநாயகன் என்று வர்ணித்துள்ள மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை 2வது கதாநாயகன் என்று கூறியுள்ளார். இந்த கதாநாயகன்களை தமிழகம் முழுவதும் வீடுதோறும் கொண்டு போய் அறிமுகம் செய்தாலே போதும். திமுகவின் வெற்றி உறுதி.

Also Read: “தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சியா? கலைஞர் ஆற்றிய அரும்பணிகள் இதோ”: அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-2