Tamilnadu

RMMC கல்லூரியில் கட்டண உயர்வு : “இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு” : மு.க.ஸ்டாலின் சாடல்!

கொரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு 2 மாதம் ஆகும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி 59 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு, தனிச் சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து 59 நாளாக அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக பிப் 2- ந் தேதி தமிழக அரசு மற்ற அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் இந்த ஆண்டிலிருந்து வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது.

அதனையடுத்து மாணவர்களும் மருத்துவ கல்லூரிக்கு பணிக்குச் சென்றனர். ஆனால், அதனைத்தொடர்ந்து மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தும் போது மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே வசூலிக்கும் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அரசாணையில் இந்த ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என உள்ளது என அரசாணையை காட்டி கூறியுள்ளனர். அதனை ஏற்காத பல்கலைக்கழக நிர்வாகம், பழைய கட்டணத்தை கட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இதனால் வேதனையடைந்த மாணவர்கள் தமிழக அரசு அறிவித்த அரசு ஆணையின்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க அரசைக் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என உறுதியளித்த அ.தி.மு.க. அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது.

அறிவிப்பது ஒன்று, நடைமுறையில் வேறொன்று எனச் செயல்படும் இந்த அரசின் ஆணவப் போக்கினால் மாணவர்களிடம் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தனது அரசாணையையே மதிக்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடும் அ.தி.மு.க. அரசு, மாணவர்களை வஞ்சிக்காமல் அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோமோ அதேபோன்று நரேந்திர மோடியை திருப்பி அனுப்புவோம்” : ராகுல்காந்தி