Tamilnadu

பணம் எடுக்க முடியாததால் ஏடிஎம் மிஷினையே அலேக்காக தூக்கிய கொள்ளையர்கள்.. திருப்பூரில் துணிகரம்!

திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. இந்த வங்கி வளாகத்தில் இருந்த ஏடிஎம் இயந்தித்தை. அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாலு பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவுக்கு ஸ்ப்ரே அடித்துள்ளனர். தொடர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்கு முடியாத காரணத்தினால் ஏடிஎம் எந்திரத்தை முழுவதுமாக பெயர்த்தெடுத்து அப்படியே வெளியே எடுத்து வந்துள்ளனர்.

இதன்பிறகு தாங்கள் வந்த வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிவைத்து திருடிச் சென்றனர். இது குறித்து அந்த வழியாக நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஏடிஎம்மில் இருந்த சுமார் ரூ 1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக கைரேகை நிபுணர்களும்,மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இதே வங்கிக்கு எதிர்புறம் உள்ள வணிக வளாகம் ஒன்றில் செயல்பட்டு வரும் நான்கு கடைகளின் பூட்டை உடைத்து பணம் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கூலிபாளையம் நால்ரோடு சர்க்கார் பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை கொள்ளையர்கள் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் விட்டுவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை மாற்று வண்டியில் எடுத்துச் சென்று உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கி நிர்வாகம் கூறும் போது கடந்த 19ஆம் தேதி இயந்திரத்தில் 19 லட்சம் ரூபாய் வைத்ததாகவும் நேற்றைய தினம் வரை குறைந்த பட்சமாக ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்தபோது 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து நான்கு சக்கர வாகனத்தில் கயிற்றைக் கட்டி ஏடிஎம் எந்திரத்தை வாசல் வரை கொண்டு வந்து பின்பு வாகனத்தில் ஏற்றி சென்றிருப்பதாகவும்தெரிவித்துள்ளனர்.

இதில் ஏடிஎம் இயந்திரத்தின் கதவுகள் மற்றும் வாசல் ஆகியவை சேதமடைந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கும்போது திருப்பூர் ஈரோடு செல்லும் முக்கிய பிரதான சாலையாக இருந்து வரக்கூடிய இப்பகுதியில் வங்கி செயல்பட்டு வருவதாகவும் ஆனால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் வங்கி நிர்வாகம் சார்பில் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த இரண்டு வருடமாக இந்த வங்கிக்கு இரவு நேரக் காவலர்கள் நியமிக்கப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில் ஆங்காங்கே பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் போது கூட கொள்ளை சம்பவம் நிகழ்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Also Read: "குடிமராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளை; ஊழல் பணத்தை அள்ளும் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் விளாசல்!