Tamilnadu

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி- தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் விதிகளை மீறி தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். பல இடங்களில் அ.தி.மு.க-வினர் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தி.மு.க-வினர் கண்டறிந்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

தேர்தல் அறிவித்த பின்னர், பரிசுப் பொருள்களை மக்களுக்கு வழங்கி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆளுங்கட்சியினர் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என இந்திய தேர்தல் ஆணையர் நேற்று மாலை அறிவித்தார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு, இன்று, கோவை மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின் பேரில் வீடு வீடாகச் சென்று 500 ரூபாய் பணம், ஒரு வேட்டி, ஒரு சேலை, 200 ரூபாய் மதிப்பிலான ஒரு தட்டு ஆகியவற்றை அ.தி.மு.க நிர்வாகிகள் விநியோகம் செய்து வருகின்றனர்.

நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது பண விநியோகம் மற்றும் பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நேற்று தெரிவித்தார்.

ஆனால் கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தலைமையிலான அ.தி.மு.க.வினர் பரிசுப்பொருள்கள் வழங்கி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறி வருகின்றனர். அனைத்து விதிமுறைகளையும் ஆளுங்கட்சியினர் காலில் போட்டு மிதித்துள்ளனர். ஆனால், ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை பற்றி தெரிந்தும், இதை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக, கண்டும் காணாதவர்களைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விதிமீறல்கள் குறித்து இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை. இதை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு- உணவு இன்றி- மருந்து இன்றி மக்கள் தவித்த நேரத்தில் எந்த ஒரு நிவாரணமும் தராமல் மக்கள் சிரமத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு , ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா கால ஊழல் டெண்டர்களில் முறைகேடுகள் செய்வதில் சுறுசுறுப்பாகவும்- சுயநலத்துடனும் இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஆளுங்கட்சியினர் , இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதும் , மக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கி ஓட்டுகளை பெறுவதற்காக நாடகமாடி வருகின்றனர்.

கடந்த பத்து வருடங்களாக, மக்களுக்கு சாலை, குடிநீர் , சுகாதாரம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தராமல், இதற்கெல்லாம் நடவடிக்கை எடுத்து உதவ முடியாத, கையாலாகாத அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை, மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். இப்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டதும், மக்களை பரிசுப் பொருள்கள் என்ற தூண்டிலை போட்டு,மக்களுடைய நாக்கில் ‘தேனைத்தடவி’ ஆளுங்கட்சியினர் ஏமாற்ற நினைக்கின்றார்கள். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் அ.தி.மு.க அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஆகவே தேர்தல் நேர்மையாகவும், ஓட்டுக்களை விலைக்கு வாங்காமலும் நடப்பதை மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் செய்யும் ஆளுங்கட்சியினர் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம்; மீண்டும் சிங்கார சென்னையாக மாற்றுவோம்” - மு.க.ஸ்டாலின் உறுதி!