மு.க.ஸ்டாலின்

“சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம்; மீண்டும் சிங்கார சென்னையாக மாற்றுவோம்” - மு.க.ஸ்டாலின் உறுதி!

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு அரைமணி நேரம் இருக்கும்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ஒதுக்கீட்டை அறிவித்து கபட வேடம் போடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

“சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம்; மீண்டும் சிங்கார சென்னையாக மாற்றுவோம்” - மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“நான்கு ஆண்டுகள் வராத ஞானோதயமாக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு அரைமணி நேரம் இருக்கும் போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ஒதுக்கீட்டை அறிவித்து கடைசித் தருணத்திலும் கபட வேடம் போடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி. தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும் அதற்கான ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று உரியவர்களுக்கு உரியது வழங்கப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (27-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மாவட்டம், மாதவரம் – வி.எஸ்.மணி நகர் விரிவு, வடபெரும்பாக்கம் சாலை அருகில் நடைபெற்ற, சென்னை வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் நிறைவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம்:

“இந்திய அரசியல் களத்தில் கலைஞரைப் போல நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையைக் கண்ட எத்தனையோ தலைவர்கள் உண்டு. கலைஞரை விட உயரமான இந்திய நாட்டின் பிரதமர் பதவியை, குடியரசுத் தலைவர் பதவியை அவர்கள் அலங்கரித்திருக்கலாம். ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் தான் போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்… வெற்றி பெற்றார்… வெற்றி பெற்றார்… என்பதைத்தவிர, தோல்வி என்பதையே காணாத தலைவர் ஒரு தலைவர் உண்டென்றால் அது தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

இந்தியா தனது விடுதலைக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் 1952ம் ஆண்டு நடந்தது. அந்த தேர்தலில் மட்டும் தான் கலைஞர் போட்டியிடவில்லை. போட்டியிடவில்லை என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்கும் முடிவை அப்போது எடுக்கவில்லை. நமது கொள்கையை ஆதரிப்பவர்களை நாம் ஆதரித்தோம்.

அதன்பிறகு திருச்சியில் நடந்த மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவெடுத்தோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி என்றால், தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என்பதற்கு ஒரு தேர்தல் நடத்தினார். மாநாட்டுக்கு வந்திருந்த கழகத் தொண்டர்கள் அனைவரிடமும் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்தினார். தேர்தலில் கழகம் போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்.

அதன்பிறகு 1957 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டோம். கலைஞரும் சபைக்குள் சென்றார். இதுவரை 2016-ஆம் ஆண்டு வரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் நின்றார். வென்றார். சென்றார். சாதித்தார்... என்கிற மாபெரும் சரித்திரம் நம் தலைவர் கலைஞருக்கு மட்டும் தான் உண்டு. அப்படிப்பட்ட சாதனை மனிதரைத் தலைவராகப் பெற்ற உடன்பிறப்புகள் நாம்!

அத்தகைய கலைஞர் அவர்கள் நம்மை விட்டுப் பிரியும் போது அவர் முதல்வராக இல்லை. அந்தக் கவலை இன்றைக்கும் எனக்கு உண்டு. கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் காலம் முந்திக்கொண்டு அவரை நம்மிடம் இருந்து பிரித்தது. அந்தக் காலம் இப்போது நெருங்கி வந்துவிட்டது.

கலைஞர் ஆட்சியை - கழக ஆட்சியை அமைப்பதற்கான ஜனநாயகப் போரைத்தான் நாம் தொடங்கி இருக்கிறோம். தமிழகத்தின் முக்கால் பகுதியை இந்த ஒருமாத காலத்தில் வலம் வந்துள்ளேன். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டமிடுதலோடு வலம் வந்தேன். இப்போது என்னுடைய தொகுதியையும் உள்ளடக்கிய மாவட்டங்கள் இணைந்த கூட்டத்துக்கு வந்திருக்கிறேன்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும் கழகத் தலைவர் என்ற அடிப்படையில் எல்லாத் தொகுதியும் என் தொகுதிதான் என்ற எண்ணத்துடன் வலம் வருகிறேன். அப்படி வலம் வருகையில் பார்க்கும் மக்கள் எல்லோரும் சொன்னது, இப்போது ஆட்சி ஒன்றே நடக்கவில்லை. அதனால்தான், பழனிசாமியை உதவாக்கரை முதலமைச்சர் என்று நான் சொல்லி வந்தேன். சிலர் கூட அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதுதான் உண்மை என்பதை அவர் நாளுக்கு நாள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.

அவரால் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. எழுவர் விடுதலையை செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்க முடியவில்லை. மாநில உரிமைகளை மீட்க முடியவில்லை. நிதியை கேட்டு பெற முடியவில்லை. பேரிடர் இழப்பீடுகளை வாங்க முடியவில்லை. இந்தித் திணிப்பை தடுக்க முடியவில்லை. சும்மா திட்டங்களை அறிவிக்கிறாரே தவிர அதனை அமல்படுத்த முடியவில்லை. அதற்காக திட்ட அனுமதியை பெற முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வர முடியவில்லை. இப்படி எதுவும் முடியாதவரை உதவாக்கரை என்று தானே சொல்ல முடியும்?

ஆட்சி முடியப் போகும் கடைசி நிமிடம் வரைக்கும் பழனிசாமி தனது கபட வேஷங்களை நிறுத்தவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள் ஒதுக்கீட்டை நேற்றைய தினம் பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் தேதி நாலரை மணிக்கு வரப்போகிறது என்று தெரிந்து இரண்டரை மணிக்கு இதை அறிவித்துள்ளார். இந்த நான்காண்டு காலம் அவருக்கு இதற்கான ஞானோதயம் ஏன் வரவில்லை.

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி நீதிபதி குலசேகரன் அவர்கள் தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. அந்த ஆணையத்தின் அறிக்கை வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு அறிவிப்பை அறிவிக்கிறார் என்றால் இங்கு தான் பழனிசாமியின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைச் சொல்லிவிட்டு, தற்காலிகமானது தான் என்றும் பழனிசாமி சொல்கிறார். இது இன்னொரு பெரிய மோசடி.

ஒரு பழனிசாமிக்குள் எத்தனை பழனிசாமிகள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஆணையத்தின் அறிக்கையை பெற்று உரியவர்க்கு உரியதை கழக அரசு வழங்கும்!

ஆட்சி முடியப் போகும் போது அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தை போல சும்மா கல்வெட்டுகளை திறக்கிறார். பச்சை பெயிண்ட் அடிக்கிறார். பச்சை பேனர்கள் கட்டுகிறார். மக்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார் பழனிசாமி. மக்கள் அப்பாவிகள் அல்ல. அவர்களுக்கு எல்லாம் தெரியும்.

நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துவிட்டால் - டிவியில் விளம்பரம் போட்டுவிட்டால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைக்காதீர்கள். அரசாங்கத்தை விமர்சித்து நாளிதழ்களில் எழுதாவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது, மறைத்துவிட்டோம் என்று நினைக்காதீர்கள். பழனிசாமியோடு சேர்த்து இன்றைய ஊடகங்களையும் மக்கள் புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சென்னை மக்களை பார்க்கும்போது இந்த மாநகரத்தின் மேயராக இருந்த காலக்கட்டம் என் மனதில் பசுமையாக இருக்கிறது. 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக நான் வலம் வந்தேன்.

“சென்னை மாநகரத்தின் தந்தை என்று சொல்வதை விட இந்த மாநகரத்தின் முதல் சேவகனாக இருப்பதையே விரும்புகிறேன்" என்று சொன்னேன். “என்னைத் தேர்ந்தெடுத்த மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று வருந்தாத அளவிற்கு - வாக்களிக்காத மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோம் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு என் பணிகள் இருக்கும்" என்று சொன்னேன்.

அப்படித்தான் நடந்து கொண்டேன் என்பது சென்னை மாநகர மக்களுக்குத் தெரியும்.

பல நூறு ஆண்டு காலமாக சென்னை ராஜதானியாக இருந்த இந்த நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது பேரறிஞர் அண்ணா அவர்கள். நானூறு ஆண்டு பழமை கொண்ட இந்த சென்னை மாநகரமானது ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்று எழுதப்பட்டதை மாற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் சென்னை என்று எழுதப்பட காரணமாக அமைந்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

1996 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. “இனி சென்னை நகரம் மெட் ராஸ் என்றோ மதறாஸ் என்றோ அழைக்கப்படாது. தமிழ், ஆங்கிலம் இன்ன பிற மொழிகள் அனைத்திலும் சென்னை என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும்" என்று தீர்மானம் போட்டதே கழக அரசு தான்.

சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பத்து பாலங்கள் அமைக்கப்பட்டது. அந்தப் பாலங்கள் மட்டும் அன்று அமைக்காமல் போயிருந்தால் இன்றைய சென்னையே டிராபிக் ஜாம் சென்னையாகத் தான் இருந்திருக்கும். 94 கோடி மதிப்பிலான அந்தப் பாலப் பணிகளை 61 கோடிக்குள் முடித்து 33 கோடி ரூபாயை மாநகராட்சிக்கு திருப்பிக் கொடுத்தோம் என்பது மட்டுமல்ல, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே முடித்தேன்.

மாநகராட்சி பள்ளிகள் என்றாலே கேவலமாக நினைத்த நிலையை மாற்றி, தரம் உயர்த்தினேன். தனியார் பள்ளிகளைப் போல மாநகராட்சி பள்ளிகளில் இடம் கிடைப்பதும் சிரமம் என்ற சூழலையும் உருவாக்கினோம். முதன் முதலாக மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டது. குப்பை இல்லாத சென்னையை உருவாக்கினோம். திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

சிங்கார சென்னைத் திட்டம் அமல் ஆனது. கிளீன் சிட்டி ஆனது சென்னை. புதிய வடிகால்கள் உருவாக்கப்பட்டன. சாலைகள் விரிவாக்கம்; சாலைகள் புதுப்பிக்கப்பட்டன; உட்புற சாலைகள் போடப்பட்டன; மின்னும் தெருப்பலகைகள் அமைக்கப்பட்டன; மாநகராட்சி இடங்கள் மீட்பு; புதிய பூங்காக்கள்; சாலையோர பூங்காக்கள்; கூவம் கரையோர பூங்கா; விளையாட்டு திடல்கள்; விளையாட்டு மைதானம்; உடற்பயிற்சி கூடங்கள்; கணினி மயம் ஆனது மாநகராட்சி - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த சாதனைகளைப் பார்த்து கோபம் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, ஒருவருக்கு பதவி என்ற சட்டத்தை தனிப்பட்ட எனக்காகவே கொண்டு வந்தார். சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை வைத்துக் கொண்டு மேயர் பொறுப்பை விட்டு விலகினேன்.

2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் கழகம் தான் வென்றது. கழக வேட்பாளராக நிறுத்தப்பட்ட மா.சுப்பிரமணியன் மகத்தான வெற்றியைப் பெற்றார். சென்னை மாநகரம் அப்போதும் திமுகவால் தக்க வைக்கப்பட்டது. அப்போது நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். என்னுடைய வழிகாட்டுதலில் மா.சுப்பிரமணியம் பணிகளைத் தொடர்ந்தார்.

* மாணவர்களுக்கு மடிகணினி

* சென்னைத் தெருக்களில் அன்னைத் தமிழ்ப்பெயர்

* மூத்த குடிமக்கள் சிகிச்சை மையம்

* எஸ்.எம்.எஸ். செய்தால் ரத்த பரிசோதனை

* யானைக்கால் மற்றும் போலியோ தடுப்பு

* கொசு ஒழிப்பு

* மருத்துவ முகாம்கள்

* சுகாதார தூதுவர்களாக மாணவர்கள்

* நவீனமயமாக்கப்பட்ட மருத்துவமனைகள்

* முதியோர் இல்லங்கள்

* பெண்கள் பாதுகாப்பு

* இடுகாட்டு பணியாளர்கள் பணி நிரந்தரம்

* மயான உதவியாளர்கள் என பெயர் மாற்றம்

* ஏராளமான பூங்காக்கள்

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்த போது சென்னை மேயராக மா.சுப்பிரமணியம் இருக்கிறார். இது சென்னையின் பொற்காலமாகப் போற்றப்படும் காலமாக இருந்தது. அத்தகைய காலத்தை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும்.

கழக அரசு அமைந்ததும் உடனடியாக நகர் பகுதிக்கான உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என்ற வாக்குறுதியை இக்கூட்டத்தின் வாயிலாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

செங்குன்றம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சென்னைக்கே ஏற்பட இருந்த பாதிப்பை முதல்வர் கலைஞர் அவர்கள் தான் தனது துரிதமான முயற்சியால் தடுத்தார்கள்.

1999 ஆம் ஆண்டு ஒருநாள் இரவில் செங்குன்றம் ஏரி உடையப் போகிறது, அது உடைந்தால் சென்னையும் சுற்றுப்பகுதியும் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று முதல்வர் கலைஞரை எழுப்பி காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னபோது, உடனடியாக அரசாங்க இயந்திரத்தை முடுக்கி விட்டு அபாயத்தை தடுத்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள். தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அன்றைக்கு நான் சென்னை மேயராக இருந்தேன். மாநகராட்சி நிர்வாகத்தை முழுமையாக இறக்கிவிட்டோம். அந்த நள்ளிரவில் கோட்டைக்கு புறப்பட்டு விட்டார் முதல்வர் கலைஞர். அவரோடு நானும் சென்றேன். அனைவரையும் அங்கே வரச் சொல்லிவிட்டார். பாதி அமைச்சரவை வந்துவிட்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு அளவுக்கு தண்ணீர் இருந்தது. நம்முடைய தொடர் நடவடிக்கைகளால், அதிகாலையில் ஓரளவு நிலைமை சீரடையத் தொடங்கியதும், செங்குன்றம் போகலாம் என்று முதல்வர் கலைஞர் சொல்லிவிட்டார்கள். நானும் அவரோடு தயாராகி நிற்கிறேன்.

ஆனால் காவல்துறை உயரதிகாரிகள் நீங்கள் செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். அதைக் கேட்க வில்லை கலைஞர் அவர்கள். அங்கே போய் பார்த்தே ஆகவேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அவரோடு நாங்களும் சென்றோம். நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தனது கண்ணால் பார்த்த பிறகுதான் முதல்வர் கலைஞர் அவர்கள் அமைதியானார்கள். இதுதான் கலைஞர்!

2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் மிதந்தது. செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரை திறந்து விடுவதில் அதிமுக அரசு காட்டிய அலட்சியத்தால் சென்னை மிதந்தது. ஊழல் மணியான வேலுமணி இந்த சென்னையை சீரழிந்த சென்னையாக ஆக்கிவிட்டார். தான் கொள்ளை அடிப்பதற்கும், கணக்கு காட்டுவதற்குமான ஊராக சென்னையை ஆக்கிவிட்டார்.

இவர்கள் அடித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து, புதிய நவீனமான ஒரு நகரையே ஊருக்கு வெளியில் உருவாக்கலாம். அந்தளவுக்கு அள்ளிக் குவித்திருக்கிறார்கள். இதுதான் அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்பதை சென்னை மாநகரத்து மக்கள் உணர வேண்டும். உணர்ந்துள்ளீர்கள்.

சென்னையில் எப்போது மழை வெள்ளம் வந்தாலும் முதலில் வந்து பார்ப்பது நானாகத் தான் இருப்பேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும். சுத்தமான - சுகாதாரமான - அழகான - கம்பீரமான சென்னையை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு.

பிரிட்டிஷ்காரர்கள் - பிரெஞ்சுக்காரர்கள் - டச்சுக்காரர்கள் - போர்ச்சுக்கீசியர்கள் - அராபியர்கள் - அர்மீனியர்கள் என்று உலகத்தின் பல்வேறு மக்கள் வாழ்ந்த பாரம்பரியமான ஊர். இந்த ஊரின் பாரம்பரியத்தை அதன் வரலாற்றுப் பெருமைகள் சிதையாமல் நவீனப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இது ஒரு நகரம் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் தலைநகரம். இந்த தலைநகரத்தை நாம் தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும்.

சென்னை மாநகரத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களே!

உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும். ஒரு தொகுதி, ஒரே ஒரு தொகுதியைக் கூட விட்டுவிடக் கூடாது.

1959 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியைக் கழகம் கைப்பற்றியது. கலைஞர் தான் தேர்தல் பொறுப்பாளர். அண்ணாவுக்கே நம்பிக்கை குறைவாக இருந்தது. ஆனால் வெற்றி பெறுவோம் என்று சொன்னார் கலைஞர்.

அப்படி வெற்றி பெற்றால் கணையாழி அணிவிக்கிறேன் என்றார் அண்ணா. சொன்னது போலவே சென்னையை வென்றோம். கடற்கரைக் கூட்டத்தில் கலைஞருக்கு கணையாழி அணிவித்தார் அண்ணா அவர்கள்.

கழகத்தின் சார்பில் அ.பொ.அரசு அவர்கள் மேயர் ஆனார்கள். 1967 ஆம் ஆண்டு நான் அரசு அமைக்க அடித்தளம் அமைத்தது சென்னையின் வெற்றி. அத்தகைய முழுமையான வெற்றியை சென்னை மாநகரத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சேர்ந்து ஈட்டித்தர வேண்டும். அத்தகைய வெற்றிக்குப் பிறகு அமையும் அரசு, இந்தச் சென்னையை மீண்டும் சிங்காரச் சென்னையாக மாற்றும். இது உறுதி!"

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories