Tamilnadu

நீலகிரியில் 93, சென்னையில் 91 என ஸ்கோர் போல் உயரும் பெட்ரோல் விலை.. அசராமல் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மீதான விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஓரிரு வாரங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையான உயர்வை பெற்றுள்ளது. அவ்வகையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய நிலவரப்படி 91.14 ரூபாய் என விற்பனை ஆன நிலையில் 26 காசுகள் அதிகரித்து இன்று 91.40 ரூபாய் என விற்பனை ஆகிறது.

அதேபோல, டீசல் விலை நேற்று 84.39 ரூபாய் விற்பனை ஆன நிலையில்,33 காசுகள் அதிகரித்து 84.72 ரூபாய் என விற்பனை ஆகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய்க்கும், டீசல் 85.78 காசுகளுக்கு விற்பணை செய்யப்படுவதால் மலை மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

டீசல் விலை அதிகரித்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் பெரும் குழப்பத்தில் மலைமாவட்ட மக்கள் உள்ளனர். இதே போன்று தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலையால் நடுத்தர மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Also Read: ’சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலை 40 ரூபாய் தான்’: மோடி அரசின் நடவடிக்கையை முட்டாள்தனம் என சொல்லும் சு.சாமி