Tamilnadu

“தமிழக அரசு பணியில் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம்: ஒன்றுப்பட்டு தடுப்பதே நம் கடமை” - தினகரன் தலையங்கம்!

தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் வடமாநில இளைஞர்களுக்கு தாரை வார்ப்பு என்று தினகரன் நாளிதழ் நேற்று தலையங்கம் தீட்டியுள்ளது. இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று (11.2.2021) வெளிவந்த தலையங்கம் வருமாறு:-

தமிழக இளைஞர்களின் மிகப்பெரிய மூலதனம் கல்வி அதை மட்டுமே மூலதனமாக கொண்டு அத்தனை துறைகளிலும் தடம் பதித்து வந்திருக்கிறார்கள். சுயதொழிலை விட அரசு துறைகளில் பணிபுரிவதில் தமிழக இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகம். அதனால் வறுமையில் இருந்தாலும், மகன்-மகளை படிக்க வைத்து போட்டித்தேர்வு. எழுத வைத்து, ஏதாவது ஒரு அரசு வேலைக்கு அவர்களை அனுப்ப தங்கள் ஆயுளை செலவழிக்கும் பெற்றோர் இங்கு அதிகம். இப்போது அதற்கும் வேட்டு வைத்து இருக்கிறது மத்திய அரசு.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு துறைகளில் நமது இளைஞர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதை எப்படி பொறுத்துக் கொள்வது? நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த பிப்ரவரி 2020இல் நிர்வாக பட்டதாரி பயிற்சியாளர் 259 இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைத் தேர்வு செய்ய அறிவிப்பு ஆணை வெளியிட்டு, எழுத்துத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், தமிழ் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றனர்.

Also Read: “நீ என்ன சொல்றனு எனக்கு புரியல”- இந்தியில் குறுக்கிட்டு பேசிய பா.ஜ.க எம்.பிக்கு கார்த்தி சிதம்பரம் பதில்!

எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களிலிருந்து 1582 பேரை அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு என்.எல்.சி. நிறுவனம் முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்திலிருந்து வெறும் 8 பேர் மட்டுமே இடம்பெற்று உள்ளனர் என்பது எத்தனை அவமானம்? இத்தகைய பணிகளில் 259 காலி இடங்களில் நூறு சதவீதம் குஜராத், உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தகுதி வாய்ந்த, திறன் மிக்க தமிழக இளைஞர்கள் இங்கு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். நெய்வேலி மட்டுமல்ல, ஆவடி ராணுவ தொழிற்சாலை பணிகள், தென்னக ரயில்வே பணிகள், திருச்சி பெல் தொழிற்சாலை பணிகள், ஏன் அணு உலையே வேண்டாம் என்று போராட்டம் நடத்தி கொந்தளித்த கூடங்குளத்தில் கூட நிரந்தர பணிகள் அனைத்தும் வட மாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்படுகின்றன.

மும்பை, டெல்லி, குஜராத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக இளைஞர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள் கிடைக்காமல் புறந்தள்ளப்படுகிறார்கள். அஞ்சல் துறையில் நடந்த தமிழ் தேர்வில் இந்தி படித்த வடமாநில இளைஞர்கள் சாதித்த வரலாறும், தமிழில் படித்து, தமிழ் பேசி வாழும் தமிழக இளைஞர்கள் தமிழில் நடந்த தேர்வில் இந்தி பேசும் இளைஞர்களிடம் தேர்வில் தோற்றுப்போன சாதனையும் இங்கே தானே நடந்தது. இன்னும் பொறுத்திருந்தால் அத்தனை பணியிடங்களிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வடமாநில இளைஞர்களுக்கு தாரை வார்க்கப்படும்.

ஒன்றுபட்டு தடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை. இவ்வாறு தினகரன் நாளிதழ் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “பசி - வேலையின்மை - தற்கொலை என மக்களுக்கு 3 வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி” : ராகுல் விளாசல்!