Tamilnadu

“ஆராய்ச்சி மாணவர்களை கொத்தடிமை போல் பயன்படுத்தும் பல்கலை. பேராசிரியர்கள்” : ஒற்றை ஆளாய் போராடும் மாணவர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஜீவா. இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். முன்னதாக நடைபெற்ற GATE தேர்வில் அகில இந்திய அளவில் 76வது இடத்தைப் பிடித்து ஜீவா சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, NET தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில், எம்.எஸ்.சி வேதியியல் படித்த மாணவர் ஜீவாவை தன்னிடம் வந்து படிக்குமாறு பேராசிரியர் தியாகராஜன் என்பவர் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தியாகராஜனிடம் மாணவர் ஜீவாவும் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்துள்ளார்.

ஆராய்ச்சிக்காக படிக்கும் மாணவர்களுக்கு பாடத்தைக் கற்றுத்தருவதற்கு பதிலாக அவர்களிடம் எடுபிடி வேலை செய்யுமாறு பேராசிரியர் தொல்லை கொடுப்பது தொடர்கதையாகிறது.

அந்த வகையில், தன்னை படிக்கவிடாமல் பேராசிரியர் தியாகராஜன் தனது சொந்த வேலைக்குப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி ஜீவா பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காலையில் இருந்து ஒற்றையாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜீவாவின் இந்தப் போராட்டம் குறித்து கேட்டறிந்தோம். அப்போது ஜீவா கூறுகையில், “இந்தாண்டு எனக்கு கிடைக்கவேண்டிய அரசின் கல்வி உதவித்தொகையை தராமல் நிர்வாகம் இழுத்தடிக்கிறது.

இதனால் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள முடியாமல் சிரமமாக உள்ளது. அதுமட்டுமல்லாது, ஆராய்ச்சி படிப்புக்காக வேதியியல் பொருட்கள் மற்றும் உபகரணங்களைத் தராமல் என்னை அலைக்கழிக்கிறார்கள்.

இதுதொடர்பாக கடந்தாண்டே பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். அதற்காக சிண்டிகேட் குழுவெல்லாம் அமைத்தார். ஆனால் இதுநாள்வரையில் தான் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் என்னுடைய கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக என்னுடைய பேராசிரியர் தியாகராஜன் எனக்கான ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விடாமல் தண்ணீர் பிடிப்பது, ஜெராக்ஸ் எடுக்க சொல்வது, வீட்டு வாட்ச்மேன் போன்ற வேலைகளை வாங்குவது என சொந்த வேலைகளை செய்ய கட்டாயப் படுத்துகிறார். எனவே என்னைப் போன்ற ஏழை மாணவரின் நிலை கருதி, பல்கலைக்கழகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்தும் பேராசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக ஒற்றை ஆளாக மாணவர் ஜீவா போராடி வருவது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிப்.,7ல் கோரிக்கை.. 9ம் தேதி உதவிக்கரம் நீட்டிய தி.மு.க.. ஏழைப் பெண்ணின் வறுமையை போக்கிய மு.க.ஸ்டாலின் !