Tamilnadu

69% இடஓதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் அ.தி.மு.க பா.ஜ.க அரசுகள் - EWS இட இதுக்கீட்டுக்கு பச்சைக்கொடி!?

தமிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் முதுநிலை பயோ டெக்னாலஜி படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், 69% இட ஒதுக்கீட்டை மறுத்துள்ள அரசு, 10% பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருப்பது கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் உயர்சாதியினருக்கான 10% பொருளாதார அடிப்படையிலான இடஓதுக்கீடு கொண்டு வர மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்த அ.தி.மு.க அரசு, தற்போது இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவர் எழிலன், அ.தி.மு.க அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மருத்துவர் எழிலன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் உள்ளன.

இந்நாள் வரை எல்லா பட்டப்படிப்புகளுக்கும் 69% இடஓதுக்கீடு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடந்து வந்துள்ளது. இந்த வருடம் அரசு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் உயிரி தொழில்நுட்ப படிப்புகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

பல்கலைக்கழக மானியக் குழு தெளிவாக அதன் அறிக்கையில் மாநில அரசு இடஓதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கவேண்டும் என்று கூறினாலும், பா.ஜ.க-வின் அடிமை அரசாக உள்ள அ.தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் சிறப்பாக விளங்கும் 69% இடஓதுக்கீட்டை ரத்து செய்து, 50% இடஓதுக்கீட்டை நடைமுறைப் படுத்தியுள்ளது.

மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் உயர்சாதியினருக்கான 10% பொருளாதார அடிப்படையிலான இடஓதுக்கீடு கொண்டு வர மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்த அ.தி.மு.க அரசு, இந்தத் தொகுப்பில் உயர்சாதியினருக்கான 10% பொருளாதார இடஓதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது சமூக நீதிக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம். தந்தைபெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஏன் ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி M.Tech படிப்புகளை நிறுத்திய அண்ணா பல்கலை. : வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசு!