Tamilnadu

“10 ஆண்டுகளில் விளம்பரத்துக்காகவே ரூ.100 கோடி செலவு” - மக்கள் பணத்தை வாரி இறைத்த அதிமுக அரசு!

"மக்கள் குரல்" மற்றும் "ட்ரினிட்டி மிரர்" நாளிதழ்களில் எந்த வித வரையறையுமின்றி அதிக கட்டணத்துக்கு அரசு விளம்பரம் கொடுத்ததன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 100 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனுசீலன் எனும் பெயரில் மாதமிருமுறை வெளிவரும் பத்திரிகையின் ஆசிரியரான சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் குரல் தமிழ் மற்றும் ட்ரினிட்டி மிரர் ஆங்கில நாளிதழ் ஆகிய இரண்டிலும் அரசு விளம்பரங்களுக்கு மற்ற நாளிதழ்களை விட அதிகப்படியான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உதாரணமாக மக்கள் குரல் மற்றும் ட்ரினிட்டி மிரர் நாளிதழின் முழு பக்க விளம்பரத்துக்கு பொதுமக்களிடம் 1 லட்சத்து 44 ரூபாயும்,மத்திய அரசிடம் 27 ஆயிரத்து 200 ரூபாயும் வசூலிக்கப்படும் நிலையில், தமிழக அரசு மட்டும் 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தினத்தந்தி நாளிதழுக்கே ஒரு முழு பக்க விளம்பரத்துக்கு அரசு 25 லட்சத்து 80 ஆயிரத்து 800 ரூபாய் மட்டுமே வழங்கி வரும் நிலையில், தினமும் அதிகபட்சம் 5000 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கும் இந்த இரு நாளிதழ்களுக்கு, அரசு அளவுக்கு அதிகமான பணம் செலவழிப்பதாகவும், செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் மூலம் இதில் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு இதன் மூலம் அரசு நிதியில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே லஞ்ச ஒழிப்பு ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், தன் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Also Read: குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன்? - அதிமுக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை!